ஆங்கிலேயர்கள் ஆட்சிக் காலத்தில் பல்வேறு இடர்பாடுகளுக்கு இடையே தனது சொத்துக்களை விற்று முல்லைப் பெரியாறு அணையைக் கட்டி முடித்தவர், கர்னல் ஜான் பென்னிகுயிக். தேனி, மதுரை, திண்டுக்கல், சிவகங்கை மற்றும் ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்ட மக்களின் நீர் ஆதாரமாகத் திகழ்வது முல்லைப் பெரியாறு அணை.
பஞ்சத்தின் பிடியில் சிக்கித் தவித்துக் கொண்டிருந்த அன்றைய ஒருங்கிணைந்த மதுரை, ராமநாதபுரம் ஆகிய மாவட்ட மக்கள் பயன்பெறும் வகை இந்த அணை திகழ்வதால், தாகம் தீர்த்த தந்தையாக கர்னல் ஜான் பென்னிகுயிக்-கை 5 மாவட்ட மக்களும் வணங்கி வருகின்றனர்.
பென்னிகுயிக்கிற்கு மரியாதை:
கடந்த 2013ஆம் ஆண்டு தேனி மாவட்டம், கூடலூர் அடுத்துள்ள லோயர்கேம்ப்பில் அவருக்கு மணிமண்டபம் கட்டப்பட்டு, திருவுருவச் சிலையும் மாநில அரசு சார்பில் நிறுவப்பட்டது. இந்நாள் கடந்தாண்டு முதல் அரசு விழாவாகவும் கொண்டாடப்பட்டு வருகிறது.
தாகம் தீர்த்த தந்தை பென்னிகுயிக்கின் 180ஆவது பிறந்தநாளான இன்று (ஜன.15) தேனி மாவட்டத்தினர் அவருக்கு மரியாதை செலுத்தி வருகின்றனர். அவரது மணிமண்டபத்தில் அரசு சார்பில் தமிழ்நாடு துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கலந்து கொண்டு மரியாதை செலுத்தினார்.
மணிமண்டபத்தில் உள்ள பென்னிகுயிக்கின் திருவுருவப்படத்திற்கும், திருவுருவச்சிலைக்கும் மலர்த்தூவி மரியாதை செலுத்திய ஓபிஎஸ், பென்னிகுயிக் பயன்படுத்திய சாய்வு நாற்காலி, முல்லைப் பெரியாறு அணை கட்டுமானப் புகைப்படங்கள் உள்ளிட்டவைகளைப் பார்வையிட்டார்.
அவரைத் தொடர்ந்து தேனி மாவட்ட ஆட்சியர் மரியம் பல்லவி பல்தேவ், தேனி மக்களவை உறுப்பினர் ஓ.பி.ரவீந்திரநாத், கம்பம் எம்.எல்.ஏ.ஜக்கையன், முல்லைப் பெரியாறு அணையின் பொறியாளர்கள் உள்பட தேனி மாவட்ட விவசாயிகள் பலரும் அங்கு வைக்கப்பட்டிருந்த பென்னிகுயிக்கின் திருவுருவப்படத்திற்கு மலர்த் தூவி மரியாதை செலுத்தினர்.
இதையும் படிங்க:தாகம் தீர்த்த தந்தைக்கு தேனி மாவட்ட மக்களின் நன்றிக்கடன்!