தமிழ்நாடு துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தேனி மாவட்டத்தில் அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து தேர்தல் பரப்புரை செய்தார். முன்னதாக நேற்று மாலை தேவதானப்பட்டி, வடுகபட்டி, பெரியகுளம் உள்ளிட்ட இடங்களில் பெரியகுளம் சட்டப்பேரவை தொகுதி வேட்பாளர் மயில்வேல் மற்றும் தேனி மக்களவைத் தொகுதி வேட்பாளரும் தனது மகனுமாகிய ரவீந்திரநாத்குமாருக்கு ஆதரவாக பரப்புரை மேற்கொண்டார்.
பின்னர், தேனி அல்லிநகரத்தில் இரவு நடைபெற்ற பரப்புரையில் பேசிய அவர், "நடைபெற இருப்பது மக்களவைப் பொதுத்தேர்தல் மற்றும் தமிழ்நாடு சட்டப்பேரவை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல். இத்தேர்தலில் வாக்களிக்க கூடிய மக்கள், இதற்கு முன்னர் மத்தியில், மாநிலத்தில் ஆட்சியில் இருந்தவர்களில் யாருடைய ஆட்சி மக்கள் நலனில் அக்கறை செலுத்தியது என்பதை புரிந்து எஜமானர்களாக இருந்து வாக்களிக்க வேண்டும்.
காங்கிரஸ் திமுக கூட்டணியில் மத்தியில் ஆட்சியில் இருந்தபோது 10 அமைச்சர்கள் கொலு பொம்மைகளாக இருந்து தமிழ்நாட்டிற்கு எந்த திட்டமும் செயல்படுத்தவில்லை. சாத்தியக்கூறு இல்லாத திட்டமான சேது சமுத்திரத் திட்டத்தினை செயல்படுத்த 40 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு பின்னர் திட்டம் செயல்படுத்த முடியாமல் மக்கள் பணத்தை வீணாக்கினர்.
மதுரை-போடி ரயில் பாதையை அகல ரயில் பாதையாக மாற்றுவதாக காங்கிரஸ் ஆட்சியில் திட்டம் அறிவிக்கப்பட்டு எட்டு ஆண்டுகளாக நிறைவுபெறாமல், ஆமை வேகத்தில் பணிகள் நடைபெற்றுவந்தன. ஆனால் அடுத்த வந்த பாஜக ஆட்சியில்தான் இத்திட்டத்திற்கான நிதியை கூடுதலாக ஒதுக்கி பணிகள் தற்போது வேகமாக நடைபெற்றுவருகிறது. ஒரு சில மாதங்களில் இத்திட்டம் முழுமை அடைந்துவிடும்.
தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டு திமுக காங்கிரஸ் ஆட்சியில்தான் தடை விதிக்கப்பட்டது. ஆனால் மெரினாவில் புரட்சி ஏற்பட்டவுடன் அப்போது முதலமைச்சராக இருந்த நான் டெல்லி சென்று பிரதமர் மோடிஜியிடம் வலியுறுத்தியவுடன், ஒரே நாளில் நான்கு துறைகளின் அனுமதியை பெற்றுத் தந்தார். இன்றைக்கு ஜம், ஜம் என்று ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறுவதற்கு முழு மற்றும் மூல காரணம் பிரதமர் மோடி.
மேலும், திமுக ஆட்சியில் தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து காணப்பட்டதாகவும், அதிமுக ஆட்சியில் அமைதிப் பூங்காவாக தமிழ்நாடு திகழ்கிறது. தமிழ்நாட்டிலேயே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்ற தொகுதியாக தேனி தொகுதி திகழ வேண்டும்" என தெரிவித்தார்.