தேனி மாவட்டத்தில் கூட்டுறவுத் துறை மற்றும் மகளிர் அமைப்புகள் மூலம் உள்ள 517 நியாய விலைக் கடைகளில் குடும்ப அட்டைதாரர்களுக்கு தமிழ்நாடு அரசின் சார்பில் இலவச முகக்கவசம் வழங்கப்பட உள்ளது.
அதன்படி முதல்கட்டமாக 228 நியாய விலைக்கடைகளுக்குள்பட்ட இரண்டு லட்சத்து 13 ஆயிரத்து 263 குடும்ப அட்டைதாரர்களான ஆறு லட்சத்து 40 ஆயிரத்து 832 பேருக்கு ரூ. 12 லட்சத்து 82 ஆயிரம் மதிப்பிலான விலையில்லா முகக்கவசங்கள் வழங்கப்பட உள்ளது.
மேலும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை சார்பில் தேனி மாவட்ட இஸ்லாமிய மகளிர் சங்கத்தில் நலிவுற்ற நிலையில் உள்ள தேர்வு செய்யப்பட்ட 400 மகளிர்களுக்கு தலா ரூ. ஏழாயிரத்து 500 வீதம் ரூ.30 லட்சம் நிதியுதவி வழங்கப்பட உள்ளது.
இதற்கான தொடக்க விழா மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று நடைபெற்றது. தமிழ்நாடு துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கலந்து கொண்டு குடும்ப அட்டைதாரர்களுக்கு முகக்கவசங்கள் மற்றும் இஸ்லாமிய மகளிர்களுக்கு நிதியுதவி வழங்கி இத்திட்டத்தை தொடக்கி வைத்தார்.
இந்நிகழ்வில் தேனி மாவட்ட ஆட்சியர் பல்லவி பல்தேவ் மற்றும் கம்பம் சட்டப்பேரவை உறுப்பினர் ஜக்கையன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.