தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே உள்ளது கருவேல்நாயக்கன்பட்டி. சுமார் 500க்கு மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். அப்பகுதியில் உள்ள முத்துராமலிங்கம் 4 வது தெருவில் விறகு வியாபாரம் செய்து வசித்துவரும் மனோகரன் வைரமணி தம்பதி. இவர்களுக்கு மூன்று மகள்கள். தங்களின் மகள்களுக்கு திருமணம் நடைபெறுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதால் மிகுந்த விரக்தியில் இருந்துள்ளனர் .
இந்நிலையில் கடந்த 10 நாள்களுக்கு முன்பு பழனிச்செட்டிபட்டியைச் சேர்ந்த முத்து என்பவர் தான் ஒரு ஜோதிடர் எனச்சொல்லி மனோகரனின் வீட்டிற்குச் சென்று அவரது மனைவி வைரமணியை சந்தித்து உங்களின் கஷ்டம் நீங்கி குடும்பத்தில் மகிழ்ச்சி பெருகவேண்டும் என்றால் புளி உருண்டை பரிகாரம் செய்ய வேண்டும் என்று கூறி தனது செல்போன் நம்பரை கொடுத்துவிட்டு சென்றுள்ளார்.
இந்நிலையில் நவீன ஜோதிடரை சந்தித்ததாக வைரமணி தனது கணவரிடம் கூறியுள்ளார். பின்னர் பரிகாரம் செய்துவிடலாம் என ஜோதிடரை தொலைபேசியில் தொடர்பு கொண்டனர். பரிகாரம் செய்வதற்காக கடந்த ஞாயிற்றுக்கிழமை ஜோதிடர் முத்து மீண்டும் அவர்களது வீட்டிற்கு சென்றுள்ளார். வீட்டில் கணவன் மனைவியை அமர வைத்து பல பூஜைகளையும் அரங்கேற்றியுள்ளார்.
இறுதியாக உங்கள் வீட்டில் கஷ்டம் நீங்கி செல்வம் பெருக வேண்டும் என்றால் தங்க நகையை இந்த புளி உருண்டையில் வைத்து பூஜை செய்ய வேண்டும் என்று கூறியுள்ளார். ஜோதிடர் சொன்னவுடன் தான் கழுத்தில் அணிந்திருந்த இரண்டரை சவரன் தங்க சங்கிலியை கழற்றிக் கொடுத்துள்ளார்.
அதனை வாங்கிய ஜோதிடர் முன்னால் இருந்த புளி உருண்டைக்குள் செயினை வைத்து மூடியுள்ளார். கணவன் மனைவி இருவரையும் கண்களை மூடி கடவுளை வணங்கிக்கொள்ளுங்கள் என்று கூறி செயின் உள்ள புளி உருண்டையை எடுத்துக் கொண்டு தான் மறைத்து வைத்திருந்த புளி உருண்டையை மாற்றி வைத்து விட்டார். பின்னர் தம்பதியிடம் புளி உருண்டையை தண்ணீர் நிரப்பப்பட்ட சொம்பில் வைத்து 3 நாள்கள் பூஜை அறையில் வைத்து வணங்க வேண்டும் என்று கூறி அங்கிருந்து சென்றுவிட்டார்.
ஜோதிடரின் பேச்சைக் கேட்டு குடும்பமே பூஜை அறையில் வைத்திருந்த புளி உருண்டையை வணங்கியுள்ளனர். மூன்று நாள்களுக்குப் பிறகு சொம்பில் இருந்த புளி உருண்டையை எடுத்து பார்த்த போதுதான் போலி ஜோதிடரிடம் நகையினை பறிகொடுத்தது தெரியவந்துள்ளது.
மூன்று நாள்களுக்குப் பிறகு தேனி பேருந்து நிலையத்தில் நவீன போலி ஜோதிடர் முத்துவை போன்று ஒருநபர் திரிவதாக மனோகரனுக்கு உறவினர் ஒருவர் தகவல் அளித்துள்ளார். இதனையடுத்து விரைந்து வந்து போலி ஜோதிடரை மடக்கி பிடித்த போது தங்களிடம் புளி உருண்டையில் வைத்து ஏமாற்றிய இரண்டரை சவரன் நகையை கழுத்திலே அணிந்திருந்ததும் தெரியவந்தது. அதனைத்தொடர்ந்து தேனி காவல்துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது, நம்பிக்கை மோசடி, ஏமாற்றி பொருள்களை பறித்தல் உள்ளிட்ட இரண்டு பிரிவுகளின் கீழ் காவல் துறையினர் வழக்குப் பதிவுசெய்து முத்துவினை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இதையும் படிங்க :பல மாவட்டங்களில் திருடிய ஜெய்சங்கர் கைது