தேனி: சின்னமனூர் அருகேவுள்ள சீலையம்பட்டியைச்சேர்ந்தவர் துரைப்பாண்டி (40). சீலையம்பட்டி ஊராட்சி ஒன்றாவது வார்டு கவுன்சிலராக உள்ளார். துரைப்பாண்டிக்கும், அதே பகுதியைச்சேர்ந்த செந்தில்குமார் (40) என்பவருக்கும் அடிக்கடி குடும்பத்தகராறு ஏற்பட்டு வந்ததாகத் தெரிகிறது.
இந்நிலையில், நேற்று (அக்.08) தனது தோட்டத்திற்குச்சென்ற துரைப்பாண்டியை கடைவீதியில் வைத்து செந்தில்குமார், முன்விரோதம் காரணமாகத் தான் வைத்திருந்த கத்தியால் சரமாரியாக குத்தினார்.
ரத்த வெள்ளத்தில் உயிருக்குப் போராடிய துரைப்பாண்டியை உறவினர்கள் மீட்டு சின்னமனூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச்சென்றனர். ஆனால், அவர் செல்லும் வழியிலேயே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து தகவலறிந்த காவல் துறையினர் சின்னமனூர் அரசு மருத்துவமனைக்கு விரைந்தனர். பின்னர், அவரது உடலை மீட்டு உடற்கூராய்வுக்காக தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் செந்தில் குமாரைத் தேடி வருகின்றனர்.
இதையும் படிங்க: குடியைக் கெடுத்த குடி - குடிபோதை தகராறில் விவசாயி 11 முறை துப்பாக்கியால் சுட்டுக்கொலை