தேனி மாவட்டத்தில் கடந்த சில நாள்களாகவே கரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துவருகிறது.
குறிப்பாக கடந்த சில வாரத்தில் நோய்த்தொற்றின் தாக்கம் தீவிரமடைந்துள்ளது என்றே கூறலாம். இதனால் நேற்று மாலை வரையில் நோய்த்தொற்று 1,009ஆக உயர்ந்தது.
இந்நிலையில் இரண்டு அரசு மருத்துவர்கள் உள்பட நேற்று ஒரே நாளில் 119 பேருக்கு நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்களில் பெரும்பாலானோர் கம்பம், சின்னமனூர், தேனி, பெரியகுளம், போடி மற்றும் ஆண்டிபட்டி பகுதியைச் சேர்ந்தவர்கள் என்று நகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இதனால் தேனி மாவட்டத்தில் நோய்த்தொற்றால் பாதிப்படைந்தவர்களின் எண்ணிக்கை 1,128ஆக உயர்ந்துள்ளது. தற்போது வரை மூன்று பெண்கள், நான்கு ஆண்கள் என ஏழு பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் சிகிச்சையிலிருந்த 377 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
அதேசமயம் பாதிக்கப்பட்டவர்கள் தேனி, பெரியகுளம், கம்பம், போடி உள்ளிட்ட அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். தேனி மாவட்டத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கரோனா பாதிப்பு பொதுமக்களிடையே மிகுந்த அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதனால் கரோனாவை கட்டுப்படுத்த தேவையான நடவடிக்கைகளை அரசு தீவிரப்படுத்த வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.
இதையும் படிங்க: வெளியாள்கள் குறித்து தகவல் தெரிவிக்க மாவட்ட ஆட்சியர் உத்தரவு!