தேனி மாவட்டத்தில் போடி, அல்லிநகரம், பெரியகுளம், சின்னமனூர், கம்பம், உத்தமபாளையம் ஆகிய பகுதிகளில் இதுவரை 41 பேர் கரோனாவினால் பாதிக்கப்பட்டிருந்தனர். இதில் போடியைச் சேர்ந்த 53 வயது பெண் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார், மற்ற 40 பேருக்கு தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உள்ள செவிலியர் பயிற்சிப் பள்ளியில் பிரத்யேகமாக வார்டு அமைக்கப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டது.
இதில், கடந்த மார்ச் 31ஆம் தேதி 23 நபர்கள் மருத்துவமனையில் கரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இவற்றில் 18 பேர் தொடர் சிகிச்சை காரணமாக குணமடைந்தனர்.
இதனைத் தொடர்ந்து அவர்கள் வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இவர்களை, மருத்துவக் கல்லூரியில் உள்ள மருத்துவர்கள் உள்ளிட்டோர் கைகளைத் தட்டி மகிழ்ச்சியுடன் வழியனுப்பி வைத்தனர்.
இவர்களில் 8 பேர் போடி, 3 பேர் பெரியகுளம், 4 பேர் அல்லிநகரம், கம்பம், சின்னமனூர், உத்தமபாளையத்தைச் சேர்ந்த தலா ஒருவர் ஆவர். அவர்கள் வீட்டிற்குச் சென்றாலும் அங்கு அவர்களுக்கு 14 நாட்கள் தனிமைப்படுத்தி தொடர் சிகிச்சையளிக்கப்படும். அதன்பின்பு மீண்டும் ரத்தப் பரிசோதனை செய்யப்படும்.
தொடர்ந்து பலரும் குணமடைந்தால் தேனி மாவட்டம் ஹாட் ஸ்பாட் பகுதியில் இருந்து அடுத்த நிலைக்கு மாற வாய்ப்புள்ளது. அப்போது பல்வேறு கட்டுப்பாடுகள் தளர்த்தப்படலாம் என்று மருத்துவத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதையும் படிங்க: மும்பையில் உயிரிழந்த கணவர் உடலை கொண்டுவர மனைவி கோரிக்கை!