தேனி மாவட்டத்தில் கடந்த சில நாள்களாக கரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. இதுவரை இல்லாத வகையில் நேற்று (ஜூன் 22) ஒரே நாளில் 36 நபர்களுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், ஆண்டிபட்டி நகர் பகுதியில் வசித்து வரும் 52 வயதுடைய நபருக்கு இன்று வைரஸ் உறுதி செய்யப்பட்டது. இவர் மதுரை – தேனி வழித்தடத்தில் செல்லும் தனியார் பேருந்து ஒன்றில் நடத்துனராக பணிபுரிந்து வருகிறார்.
இதையடுத்து, சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது வீடு அமைந்துள்ள தெரு பகுதிகளை கிருமி நாசினி மூலம் தெளித்து பேரூராட்சி சுகாதாரத் துறையினர் சுத்தம் செய்தனர். வெளிநபர்கள் யாரும் உள்ளே செல்லாதவாறு தகரங்கள் கொண்டு தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன.
மேலும், வைரஸ் தொற்று ஏற்பட்டவரின் குடும்ப உறவினர்கள், அவருடன் நெருங்கிய தொடர்பில் இருந்தவர்கள் என 10க்கும் மேற்பட்டோரின் ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டு, அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.