தமிழ்நாட்டில் கரோனா வைரஸ் பாதிப்பு அதிகளவில் உள்ளது. தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை தினந்தோறும் ஐந்து ஆயிரத்தை தாண்டுகிறது.
அந்த வகையில், தேனி மாவட்டத்திலும் கரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மாவட்டத்தில் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை பத்து ஆயிரத்தை தாண்டியுள்ளது.
இந்நிலையில், தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவர், தேனி பழனிசெட்டிபட்டி துணை மின் நிலையத்தில் பணியாற்றும் திருநெல்வேலியை சேர்ந்த செயற்பொறியாளர், தேனி மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் அலுவலகத்தில் பணிபுரியும் இளநிலை உதவியாளர் என இன்று (ஆக.19) ஒரே நாளில் 288பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனால், மாவட்டத்தில் தொற்றால் பாதிப்படைந்தவர்களின் எண்ணிக்கை 10,772ஆக உயர்ந்துள்ளது.
மேலும், கூடலூர் ஆசாரி தெருவைச் சேர்ந்த 74 வயது முதியவர், ஆண்டிபட்டி வைகை புதூரைச் சேர்ந்த 53வயது பெண்மணி, போடி பாரதி நகரைச் சேர்ந்த 70வயது மூதாட்டி, விநோபாஜி காலணியைச் சேர்ந்த 65வயது முதியவர் மற்றும் பெரியகுளத்தை சேர்ந்த 51வயது பெண்மணி என இன்று ஒரே நாளில் 5 பேர் கரோனாவால் உயிரிழந்துள்ளனர்.