உலகையே அச்சுறுத்திவரும் கரோனா நோய்த்தொற்று இந்தியாவில் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. இதனைக் கட்டுப்படுத்த அரசு பல்வேறு முயற்சிகளை எடுத்துவருகிறது. தன்னார்வலர்கள், சமூக செயற்பாட்டாளர்கள், பிரபலங்கள் எனப் பலரும் நோய் குறித்து பாதுகாப்பு விழிப்புணர்வுகளை ஏற்படுத்திவருகின்றனர்.
இதன் ஒருபகுதியாக, குழந்தைகளின் மனம்கவர்ந்த கார்ட்டூன் கதாபாத்திரங்களின் ஓவியங்களைச் சுவர்களில் வரைந்து தேனியைச் சேர்ந்த ஓவியர் சந்துரு பிரகாஷ் விழிப்புணர்வு ஏற்படுத்தி, அனைவரின் கவனத்தையும் தன் பக்கம் ஈர்த்துள்ளார்.
தொடக்கத்தில் சாதாரண உருவங்களில் விழிப்புணர்வு வாசகங்கள் வரைந்துவந்த இவர், பொதுமக்களிடம் தனது கருத்துகள் முழுமையாகச் சென்றடைய வேண்டும் என்றால் குழந்தைகள் வாயிலாகத்தான் சாத்தியம் எனக் கருதியுள்ளார்.
அதன்படி, குழந்தைகளின் மனம்கவர்ந்த கார்ட்டூன் கதாபாத்திரங்களான சின் சான், சோட்டா பீம், காளியா, ராஜு, ஜிம்ஜாங் உள்ளிட்ட கார்ட்டூன் ஓவியங்களைச் சுவர்களில் வரைந்துள்ளார்.
'கடல்ல இருக்கு உப்பு, மாஸ்க் போடல அது தப்பு', 'அடுப்புல இருக்கு கங்கு, கைக்கழுவாமல் தின்னா நமக்குச் சங்கு' போன்ற குழந்தைகளைக் கவரும் வகையில் வாசகங்களை வரைந்து தனது வித்தியாசமான முயற்சியால் கரோனா குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்திவருகிறார்.

தேனி நகரின் முக்கியப் பகுதிகளான என்.ஆர்.டி. நகர், சமதர்மபுரம் உள்ளிட்ட இடங்களில் உள்ள அழுக்குச் சுவர்களைத் தனது கைவண்ணத்தால் அழகாக மாற்றியுள்ளார்.
இது குறித்து ஓவியர் சந்துரு கூறுகையில், ”கரோனா நோய்த்தொற்றிலிருந்து பொதுமக்கள் தங்களைப் பாதுகாத்துக்கொள்ள வேண்டும் என்ற தனது விழிப்புணர்வு குழந்தைகள் வாயிலாகச் சென்றடைந்தது மகிழ்ச்சி அளிக்கிறது.
தொடர்ந்து இதுபோல் விழிப்புணர்வு ஓவியங்கள் வரைந்து விழிப்புணர்வு ஏற்படுத்த உள்ளேன். சமூக வலைதளங்களிலும் இதுபோன்ற கார்ட்டூன் ஓவியங்களை பதிவேற்றம் செய்து விழிப்புணர்வு ஏற்படுத்துவேன்” என்றார்.
இதையும் படிங்க:வித்தியாசமான முறையில் கரோனா விழிப்புணர்வு - 'சபாஷ் சண்டைக் கலைஞர்களே!'