தேனி மாவட்டம் ஆண்டிபட்டி ஒன்றிய அலுவலகத்தில் மோடியின் புகைப்படத்தை வைப்பதற்காக பாஜகவினர் அவரது புகைப்படத்தை ஏந்தியபடி ஊர்வலமாக வந்தனர். ஆண்டிபட்டி பேருந்து நிலையத்திலிருந்து ஊர்வலமாக வந்த பாஜகவினரை ஆண்டிபட்டி டிஎஸ்பி தங்ககிருஷ்ணன் தலைமையிலான காவல் துறையினர், வட்டார வளர்ச்சி அலுவலர் சரவணன் ஆகியோர் தடுத்து நிறுத்தினர்.
பின்னர், அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியபோது, மோடியின் படத்தை வைப்பது குறித்து மாவட்ட ஆட்சியர் அனுமதி வழங்க வேண்டும் என வட்டார வளர்ச்சி அலுவலர் தெரிவித்துள்ளார். இதனால், ஆத்திரமடைந்த பாஜகவினர், பிரதமருக்கு வட்டார வளர்ச்சி அலுவலர் உரிய மதிப்பு கொடுக்கவில்லை என கூறி திடீர் சாலை மறியலில் ஈடுபட முயற்சித்தனர்.
இதையடுத்து, சம்பவ இடத்திலிருந்த காவல் துறையினர் உடனடியாக அவர்களை தடுத்து நிறுத்தி அப்புறப்படுத்தினர். இதனைத் தொடர்ந்து, மோடியின் புகைப்படத்தை வைக்க அனுமதி மறுத்த வட்டார வளர்ச்சி அலுவலர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறி பாஜகவினர் ஆண்டிபட்டி காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர்.
இதையும் படிங்க: முதலமைச்சர் தேர்வு, நடிகர்கள், விளையாட்டு வீரர் இணைப்பு : என்ன நடந்தது பாஜக ஆலோசனைக் கூட்டத்தில்?