தேனி மாவட்டம் உத்தமபாளையம் தாலுகாவில் உள்ள கோம்பை, தேவாரம் உள்ளிட்ட மானவாரி பகுதிகளின் பாசன நீர் தேவைக்காக 2008ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது 18ஆம் கால்வாய். இதற்காக முல்லைப் பெரியாற்றின் தலைமதகுப் பகுதியான லோயர் கேம்ப்பில் இருந்து கூடலூர், கம்பம், க.புதுப்பட்டி, அனுமந்தன்பட்டி வழியாக தேவாரம் ரெங்கநாதபுரத்தில் உள்ள சுத்தகங்கை ஓடை வரையிலான சுமார் 40 கி.மீ தூரத்திற்கு கால்வாய் வெட்டப்பட்டது. இதன் மூலம் 13 கிராமங்களில் உள்ள 44 கண்மாய்கள், நான்காயிரத்து 614 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி அடைந்தன.
இதனைத்தொடர்ந்து போடி தாலுகாவில் உள்ள ராசிங்காபுரம், மேலச்சொக்கநாதபுரம் பகுதி மக்களின் கோரிக்கையை ஏற்று பொட்டிப்புரம், சிலமலை வழியாக 14 கி.மீ தூரத்திற்கு கூவலிங்க ஆறு வரை 18ஆம் கால்வாய் நீட்டிக்கப்பட்டது. இதனால் போடி, உத்தமபாளையம் ஆகிய தாலுகாகளில் உள்ள ஆறு கிராமங்களைச் சேர்ந்த ஏழு கண்மாய்கள் மூலம் நான்காயிரத்து, 794 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி அடைந்தன.
நாளடைவில் கருவேல மரங்கள், முட்செடிகள், சேதமடைந்த கால்வாய் கரைகள் மற்றும் புதர் மண்டி காணப்பட்டதால் 18ஆம் கால்வாயில் திறக்கப்படும் தண்ணீர் முழுமையாக கடைமடைக்கு சென்றடைவதில் சிரமம் நிலவியது. எனவே 18ஆம் கால்வாய் பகுதியை நவீனப்படுத்த வேண்டும் என பாசன பகுதி விவசாயிகள் அரசுக்கு கோரிக்கை விடுத்தனர்.
இந்நிலையில் 18ஆம் கால்வாயின் ஜீரோ பாயிண்ட்டில் இருந்து க.புதுப்பட்டி வரையிலான 20 கி.மீ தூரத்தில் ரூ.59.10 கோடி மதிப்பில் நவீனப்படுத்தும் பணியினை காணொலி காட்சி வாயிலாக தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கிவைத்தார். அதனைத் தொடர்ந்து லோயர்கேம்ப் பகுதியில் உள்ள 18ஆம் கால்வாய் ஜீரோ பாயிண்ட்டில் கம்பம் எம்எல்ஏ ஜக்கையன் தலைமையில் பாசன பகுதி விவசாயிகள், மற்றும் பொதுப்பணித்துறை அலுவலர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டு சிறப்பு பூஜைகள் செய்து மலர் தூவி வரவேற்றனர்.