தேனி மாவட்டம் அருகே உள்ள உத்தமபாளையம் ஆர்.சி. தெருவைச் சேர்ந்தவர்கள் மேத்யூ - நிர்மலா தம்பதியினர். அவர்களுக்கு மூன்று மகன்கள் உள்ளனர். கணவர் மேத்யூ இறந்த நிலையில் மூன்று பிள்ளைகளையும் நிர்மலா வளர்த்து வருகிறார். இவர் உத்தமபாளையம் பகுதியில் உள்ள அரசுப்பள்ளியில் சத்துணவு பணியாளராக பணியாற்றி வருகிறார். இவரது மகனான பிரவீன்(18) தேனி மாவட்டம் வீரபாண்டியில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் முதலாம் ஆண்டு ஆங்கிலம் படித்து வருகிறார்.
இந்நிலையில், தனது நண்பனுடன் உத்தமபாளையம் முல்லைப் பெரியாறு ஆற்றுப் பகுதியில் பிரவீன் குளிக்கச் சென்றுள்ளார். ஆற்றில் குளித்துக் கொண்டிருக்கையில், தண்ணீர் வேகமாக செல்லும் பகுதிக்கு எதிர்பாராதவிதமாக பிரவீன் சென்றுள்ளதாகத் தெரிகிறது.
தண்ணீரின் வேகத்தால் ஆற்று நீரில் பிரவீன் அடித்துச் செல்லப் பட்டுள்ளார். அதனைக் கண்ட அவரது நண்பன், அங்கு இருந்த பொதுமக்கள் சிலர் ஆற்று நீரில் அடித்துச் செல்லப்பட்ட பிரவீனை காப்பாற்றும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
ஆனால், தண்ணீர் வேகம் அதிகமாக இருந்ததால், பிரவீன் ஆற்று நீரில் வேகமாக இழுத்துச் செல்லப்பட்டார். இதையடுத்து, உடனடியாக உத்தமபாளையம் தீயணைப்புத்துறையினருக்கும், காவல் துறையினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் உத்தமபாளையம் முல்லைப் பெரியாற்றில் மாயமான பிரவீனைத் தேடும் முயற்சியில் ஈடுபட்டனர்.
ஆனால், அந்தப் பகுதியில் தீயணைப்புத் துறையினர் தேடியும் பிரவீன் கிடைக்காத காரணத்தினால் முல்லைப்பெரியாறு தண்ணீர் செல்லும் வழியான எல்லைப்பட்டி பகுதியில் சென்று பிரவீனை தேடும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். ஆற்று நீரில் அடித்துச் செல்லப்பட்ட பிரவீன் தற்போது வரை கிடைக்கவில்லை.
தொடர்ந்து அவரைத் தேடும் பணியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இது குறித்து உத்தமபாளையம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் ஆற்றில் குளிக்கச்சென்ற கல்லூரி மாணவன் மாயமான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: முல்லைப் பெரியாறு அணைக்கு படையெடுத்த வனவிலங்குகள்!