தேனி மாவட்டம் கம்பம் அருகே உள்ள கம்பம்மெட்டு காலனி பகுதியைச் சேர்ந்த ஜீப் டிரைவர் அஸ்கர். இவரது மகன் முகமது யூனுஸ்(20) மதுரையில் உள்ள கல்லூரி ஒன்றில் இரண்டாமாண்டு படித்து வந்தார். தீபாவளி விடுமுறைக்காக வீட்டிற்கு வந்த அவர், நண்பர்களுடன் நேற்று(28.10.19) மதியம் சுருளிப்பட்டி செல்லும் வழியில் தொட்டமன்துறையில் உள்ள முல்லைப்பெரியாற்றில் குளிக்க சென்றார்.
நண்பர்களுடன் சேர்ந்து குளித்துக் கொண்டிருந்த முகமது யூனுஸ், கரைபுரண்டு ஓடிய தண்ணீர் வேகத்தில் ஆற்று நீரில் அடித்துச் செல்லப்பட்டார். இதனையடுத்து உடனடியாக தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத் துறையினர் மாணவன் முகமது யூனிசை தேடும் பணியில் ஈடுபட்டனர்.
இரவு நேரமானதால், தேடும் பணியை நிறுத்தி விட்டு இன்று காலை மீண்டும் தேடுதல், மீட்புப் பணியை தொடங்கினர். இந்நிலையில், முல்லைப் பெரியாற்றிலிருந்து தமிழ்நாடு பகுதிக்கு திறந்து விடப்படும் தண்ணீர் நிறுத்தப்பட்டு இரண்டாம் நாளாக நாராயணதேவன்பட்டி, காமயகவுண்டன்பட்டி உள்ளிட்ட இடங்களில் முகமது யூனிசை தேடும் பணி தொடர்ந்தது.
அப்போது, காமயகவுண்டன்பட்டி ஆற்று வழித்தடத்தில் முகமது யூனுஸ் தண்ணீருக்குள் புதைந்து இருந்தது தெரியவந்தது. இதனையடுத்து யூனுஸின் உடலை மீட்ட தீயனைப்புத் துறையினர் பிரேதப் பரிசேதனைக்காக கம்பம் அரசு மருத்துவமணைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும், காவல்துறையினர் இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.