தேனி மாவட்டம், பெரியகுளம் அடுத்த நல்லகருப்பன்பட்டியில் மேரிமாதா கலை மற்றும் அறிவியல் கல்லூரி செயல்பட்டு வருகின்றது. இந்த கல்லூரியில் தேனி மாவட்டம் மட்டுமின்றி, திண்டுக்கல், மதுரை, கேரளா மாநிலத்தில் இருந்தும் மாணவர்கள் வந்து படித்து வருகின்றனர். இதேபோல் கேரள மாநிலம், இடுக்கி மாவட்டம், வண்டிபெரியார் பகுதியைச் சேர்ந்த சைஜூ என்ற மாணவர் விடுதியில் தங்கி இரண்டாமாண்டு பி.காம் படித்து வருகிறார்.
இந்நிலையில், வெள்ளிக்கிழமையன்று விடுதியில் ரோந்து சென்ற காப்பாளர் அபிமன்யு, மாணவர் சைஜூ தங்கியிருந்த அறையில் இருந்து புகை வருவதை பார்த்து அங்கு சென்று சோதனை செய்தார். அப்போது சைஜூ உள்ளிட்ட ஐந்து மாணவர்கள் கஞ்சா புகைத்தது தெரியவந்தது. மேலும் அவர்கள் அறையில் இருந்து அபிமன்யூ 350கிராம் கஞ்சாவையும் கைப்பற்றினார்.
இதையடுத்து மாணவர்கள் கஞ்சா புகைப்பதை பெற்றோரிடம் தெரிவிக்க போவதாக கூறினார். இதில் பயந்து போன சைஜூ நள்ளிரவில் விடுதி அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதையறியாத அவரது நண்பர்கள் தூக்கத்தில் இருந்து எழுந்து பார்த்த போது சைஜூ தற்கொலை செய்து கொண்டிருப்பது தெரியவந்தது. இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த மாணவர்கள் உடனே காவல்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர், மாணவனின் உடலை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.