சீனாவில் இருந்து பரவத் தொடங்கிய கோவிட்-19 வைரஸின் தாக்கம் மற்ற நாடுகளிலும் அதிவேகமாகப் பரவிவருகிறது. குறிப்பாக இந்தியாவில் 137 பேருக்கு கோவிட்-19 பெருந்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் ஒருவருக்கு மட்டும் வைரஸ் தொற்று உள்ளதாக தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வுத் துறை தெரிவித்திருந்தது. இதனால் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசு தீவிரப்படுத்தி வருகிறது. பள்ளிக் கல்லூரிகள், மக்கள் கூடும் வழிபாட்டுத் தலங்கள், பொழுதுப் போக்கு மையங்கள், அரசு அலுவலங்கள் என அனைத்தும் வரும் மார்ச் 31ஆம் தேதி வரை மூடவேண்டும் என தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும், மக்கள் பொது இடங்களில் கூடவும் தடை விதித்துள்ளது.
இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கோவிட்-19 கண்டறிதல் மையமும் பெருந்தொற்றுக்கு சிகிச்சை அளிக்கும் சிறப்பு வார்டுகளும் அமைக்கப்பட்டுள்ளன. இவற்றை தேனி மாவட்ட ஆட்சியர் பல்லவி பல்தேவ் இன்று நேரில் சென்று பார்வையிட்டார்.
அதனைத் தொடர்ந்து கோவிட்-19 வைரஸ் பெருந்தொற்றுத் தடுப்பு தொடர்பாக மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து மருத்தவக்கல்லூரி கூட்டரங்கில் நடைபெற்ற அரசு, தனியார் மருத்துவர்களுடனான சந்திப்பில் அவர் கலந்துகொண்டார்.
இதனையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய ஆட்சியர், “தமிழ்நாடு அரசின் உத்தரவுப்படி கோவிட்-19 வைரஸ் பெருந்தொற்று தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தேனி மாவட்டத்தில் உள்ள சுற்றுலாத் தலங்கள், திரையரங்குகள் உள்ளிட்ட மக்கள் கூடும் இடங்கள் மூடப்பட்டுள்ளன. தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கோவிட்-19 வைரஸ் சிகிச்சைக்காக 10 படுக்கைகள் கொண்ட சிறப்பு வார்டு அமைக்கப்பட்டுள்ளது. இதுதவிர மாவட்டத்தில் உள்ள தனியார் மருத்துவமனைகளிலும் சிறப்பு பிரிவுகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அமைக்கப்பட்டுள்ள கோவிட்-19 இரத்தப் பரிசோதனை கண்டறிதல் மையத்தில் இதுவரை 3 நபர்களின் இரத்த மாதிரி பரிசோதனை செய்யப்பட்டதில், மூவருக்கும் கோவிட்-19 பாதிப்பு இல்லை என தெரியவந்துள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. மேலும் வெளிநாடுகள் மற்றும் வெளி மாநிலங்களிலிருந்து தேனி மாவட்டத்திற்கு திரும்பிய 23 பேரும் அவரவர் வீடுகளிலேயே மருத்துவக் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு கோவிட்-19 அறிகுறிகள் இல்லாவிட்டாலும் 14 நாட்கள் தொடர் மருத்துவக்கண்காணிப்பில் வைக்கப்பட்டிருப்பார்கள்.
கேரளாவிற்கு தோட்ட வேலைக்குச் சென்றுவரும் தேனி மாவட்ட தொழிலாளர்கள் மார்ச் 31ஆம் தேதி வரை அங்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் கோவிட்-19 பெருந்தொற்றால் பெரிதும் பாதிக்கப்பட்டிருக்கும் கேரள மாநில எல்லையோர மாவட்டமான இடுக்கி மாவட்ட ஆட்சியரிடம் பேச்சுவார்த்தை நடத்தி இரு மாவட்டங்களிலிருந்தும் பொதுமக்கள் யாரும் பயணம் மேற்கொள்ள வேண்டாம் என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது” என அவர் தெரிவித்தார்.
இந்நிகழ்வில் தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வர் ராஜேந்திரன், தேனி மாவட்ட கோவிட்-19 தடுப்பு நடவடிக்கைகள் கண்காணிப்பு அலுவலர் பழனிக்குமார் உள்பட பலர் உடனிருந்தனர்.
இதையும் படிங்க : கரோனா எதிரொலி: சென்ட்ரல், எழும்பூர், தாம்பரம் ரயில் நிலையங்களில் பிளாட்பார்ம் டிக்கெட் அதிரடி உயர்வு!