தேனி மாவட்டம் அல்லிநகரம் நகராட்சிக்கு உட்பட்ட பொம்மையகவுண்டன்பட்டியில் பொது மயானமும், சடலம் எரியூட்டுக் கொட்டைகையும் செயல்பட்டுவந்தது. இந்நிலையில் சில வருடங்களுக்கு முன்பு நகராட்சி சார்பில் மின்தகன மேடை அமைக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டது.
இதனால் ஏற்கனவே செயல்பட்டுவந்த சுடுகாடு நாளடைவில் பயன்பாடு இல்லாமல் போனது. இதனால் அந்தச் சுடுகாடு பகுதி சமூக விரோதிகளின் கூடாரமாக மாறிவருவதாக பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.
இது குறித்து, மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்க வந்த அப்பகுதி பொதுமக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு திடீரென பாடை கட்டி நூதன முறையில் போராட்டத்தில் ஈடுபட்டனர். கண்டன கோஷங்களை எழுப்பி தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.
இது குறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், நகரின் முக்கியப் பகுதியாக திகழும் இங்கு ஒன்று முதல் 12 வார்டுகள் உள்ளன. இங்கு அனைத்து சமுதாய மக்களும் வசிக்கின்றனர். இப்பகுதியில் பயன்பாட்டில் இல்லாமல் சுடுகாடு இருப்பதால் போதை, மது அருந்துதல், பாலியல் தொழில் உள்ளிட்ட சமூக விரோத செயல்களில் சிலர் ஈடுபட்டுவருகின்றனர். எனவே, இது சம்பந்தமாக ஆட்சியர் நடவடிக்கை எடுத்து இவ்விடத்தை அரசு கையகப்படுத்தி மக்கள் நல பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என்று கோரிக்கைவிடுத்தனர்.