கடந்த டிசம்பர் மாதம் உள்ளாட்சித் தேர்தல் தமிழ்நாட்டில் நடைபெற்றது. இதனையடுத்து தலைவர், துணைத் தலைவர் பதவிகளுக்கான மறைமுகத் தேர்தல் கடந்த ஜனவரி மாதம் நடத்தப்பட்டது. இதில் சின்னமனூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட 10 வார்டுகளில், திமுக 6, அதிமுக 4 இடங்களில் வெற்றிபெற்றன. எனவே பெரும்பான்மையிலுள்ள திமுக, ஒன்றியத் தலைவர் பதவியை பிடிக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், திடீரென திமுக சார்பில் வெற்றிபெற்ற 1ஆவது வார்டு கவுன்சிலர் ஜெயந்தி, தமிழ்நாடு துணை முதலமைச்சர் பன்னீர்செல்வத்தை சந்தித்து தன்னை அதிமுகவில் இனைத்துக்கொண்டார்.
இதனால் சின்னமனூர் ஊராட்சி ஒன்றிய பதவிகளுக்கு திமுக, அதிமுக முறையே ஐந்து உறுப்பினர்களை பெற்று சமநிலை வகித்தது. இரண்டாவது முறையாக மறைமுகத் தேர்தல் கடந்த பிப்ரவரி மாதம் நடத்தப்பட்டது. அதிமுக அந்தத் தேர்தலை புறக்கணித்ததால், தேர்தல் ரத்தானது. இதனையடுத்து சமநிலை நீடித்து வந்த நிலையில், திடீர் திருப்பமாக அதிமுகவிற்கு தாவிய ஜெயந்தியிடம் திமுக கட்சியினர் தொடர்ந்து நடத்திய பேச்சுவார்த்தையில், அவர் மீண்டும் தாய் கழகமான திமுகவிற்கு திரும்பினார்.
தற்போது திமுக கவுன்சிலர்கள் எண்ணிக்கை 6ஆக உயர்ந்தள்ளது. இந்நிலையில் இன்று நடைபெற்ற ஒன்றிய தலைவர் பதவிக்கான மறைமுகத் தேர்தலையும் அதிமுக புறக்கணித்தது. என்ன திமுகவை சேர்ந்த நிவேதா அண்ணாத்துரை வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டது. இவர் சின்னமனூர் ஒன்றியம் பூசாரிகவுண்டன்பட்டி பகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர்.
சின்னமனூர் ஒன்றியத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட நிவேதா அண்ணாத்துரைக்கு மாவட்ட பொறுப்பாளர் கம்பம் இராமகிருஷ்ணன் உள்பட திமுகவினர் வாழ்த்துக்களை தெரிவித்து இனிப்பு வழங்கி மகிழ்ந்தனர். இதனைத் தொடர்ந்து நடைபெறவுள்ள துணைத் தலைவருக்கான தேர்தலில், தாய் கழகம் திரும்பிய ஜெயந்தி சிவக்குமாருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டு, அவர் தேர்ந்தெடுக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.