தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே உள்ள ஶ்ரீஏழைகாத்தமன், ஶ்ரீவல்லடிகாரசுவாமி கோயில் திருவிழாவை முன்னிட்டு ஆண்டுதோறும் ஜல்லிக்கட்டு நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டிற்கான ஜல்லிக்கட்டுப் போட்டி இன்று(பிப்.7) நடைபெற்று வருகிறது. காலை 8 மணிக்கு தொடங்கிய போட்டியை மாவட்ட வருவாய் அலுவலர் ரமேஷ் கொடி அசைத்து தொடங்கிவைத்தார்.
முன்னதாக ஜல்லிக்கட்டு போட்டிக்கான விதிமுறைகளை அலுவலர்கள், விழாக்குழுவினர் முன்னிலையில் மாடுபிடி வீரர்கள் உறுதி மொழி எடுத்துக்கொண்டனர். அதனைத் தொடர்ந்து முதலாவதாக கோயில் காளை அவிழ்த்து விடப்பட்டு பிறகு ஜல்லிக்கட்டு காளைகள் இறக்கிவிடப்பட்டு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இதில் தேனி, மதுரை, திருச்சி, திண்டுக்கல், தஞ்சாவூர், சிவகங்கை, புதுக்கோட்டை உள்ளிட்ட தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்து கொண்டு வரப்பட்ட 600 காளைகள் களம் காண உள்ளன. மாலை 4 மணி வரை நடைபெறும் ஜல்லிக்கட்டில், 75 நிமிடத்திற்கு ஒருமுறை 50 வீரர்கள் என 300 மாடுபிடி வீரர்கள் போட்டியில் பங்கேற்க உள்ளனர்.
இதற்காக தேனி மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் தலைமையில், ஆறு காவல் துணை கண்காணிப்பாளர்கள் என 600 காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். வாடிவாசலில் இருந்து துள்ளித்குதித்து வெளியேறி, மைதானத்தில் நின்று சீறிப்பாய்ந்த காளைகளுடன் மாடுபிடி வீரர்கள் மல்லுக்கட்டி விளையாடும் வீர விளையாட்டை இளைஞர்கள், பெண்கள், குழந்தைகள் மற்றும் முதியவர்கள் என அணைவரும் குதூகலத்துடன் கண்டு ரசித்து வருகின்றனர்.
இதையும் படிங்க: 700 காளைகள், 500 காளையர்கள் - தம்மம்பட்டியில் களைகட்டிய ஜல்லிக்கட்டு