தேனி மாவட்டம் பூதிப்புரத்தைச் சேர்ந்தவரின் ஏழு வயது மகள் மனநலம் பாதிக்கப்பட்டு, வாய் பேச முடியாதவர். கடந்த நான்கு ஆண்டுகளாக அரண்மனைபுதூர் சாலையில் உள்ள தனியார் காப்பகத்தில் சிகிச்சை பெற்றுவந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் வழக்கம்போல் சிகிச்சை முடிந்து வீட்டிற்கு திரும்பிய சிறுமியின் உடலில் காயங்கள் இருப்பதைக் கண்டு அதிர்ச்சியுற்ற பெற்றோர் தேனி அரசு மருத்துவக் கல்லூரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
அவரை பரிசோதித்த மருத்துவர்கள் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுக்கப்பட்டதை உறுதி செய்தனர். இதனையடுத்து பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோர் சம்பந்தப்பட்டவர்களை கண்டறிந்து உரிய நடவடிக்கை எடுக்கும்படி மாவட்ட ஆட்சியர், தேனி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகார் அளித்தும் காவல் துறையினர் சிறுமிக்கு பாலியல் தொல்லை செய்தவர்களை கண்டறியாமல் அலட்சியம் காட்டிவந்துள்ளனர்.
இதனால், மனமுடைந்துபோன சிறுமியின் உறவினர்கள் தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் முன் சாலை மறியலில் ஈடுபட்டனர். வாய் பேசமுடியாத மாற்றுத்திறனாளி சிறுமியை பாலியல் தொல்லை செய்தவர்களை உடனடியாக கைது செய்து உரிய நடவடிக்கை எடுக்கும்வரை இங்கிருந்து கலைந்து செல்ல மாட்டோம் என்று கண்காணிப்பாளர் அலுவலகம் முன் உள்ள சாலையில் அமர்ந்து தங்களது எதிர்ப்பை பதிவு செய்தனர்.
இதனையடுத்து தகவலறிந்து, சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்த பின்னர் சிறுமியின் உறவினர்கள் கலைந்துசென்றனர்.