தேசிய செட்டியார் சங்கப் பேரவை, பெஸ்ட் மணி கோல்டு நிறுவனம் சார்பில் ஆதரவற்றோர், பழங்குடியினர், வறுமையில் வாடுபவர்கள் உள்ளிட்டோர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. கம்பம் சட்டபேரவைத் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள 5ஆயிரம் குடும்பங்களுக்குத் தேவையான அரிசி, காய்கறிகள், முகக்கவசம், கிருமி நாசினி, கபசுரக் குடிநீர், நிலவேம்பு கசாயம் உள்ளிட்ட பொருட்கள் அடங்கிய பைகள் வழங்கப்பட்டன.
இதனையடுத்து செய்தியாளர்களைச் சந்தித்த தேசிய செட்டியார் பேரவைத் தலைவர் ஜெகநாத் மிஸ்ரா கூறுகையில், 'தமிழ்நாட்டில் தொழில் வியாபாரம் வாய்ப்புகளை இழந்து வாடும், சிறு வியாபாரிகள், அன்றாடம் கூலி வேலை செய்யக்கூடிய தொழிலாளர்களுக்கு 5,000 ரூபாய், நிவாரணப் பொருட்களுடன் இலவசமாக வழங்க வேண்டும்.
குறிப்பாக மலேசியா, சிங்கப்பூர் போன்ற நாடுகளில் சிலர் மிகவும் சிரமப்பட்டு வருகிறார்கள். அவர்கள் தாயகம் திரும்புவதற்கு இந்திய அரசாங்கம் உதவிட வேண்டும். இந்தியாவில் குறிப்பாக கேரளா, ஆந்திரா, மும்பை, கொல்கத்தா, டெல்லி போன்ற மாநிலங்களில் வியாபாரத்திற்கும் தொழிலுக்கும் சென்றவர்கள் அன்றாட உணவுக்கு அவதிப்பட்டு வருகிறார்கள்.
அவர்களுக்கு மாநில அரசு, உணவு அடிப்படை சுகாதார வசதிகள் செய்திட வழிவகை செய்ய வேண்டும். மேலும் மும்பை தாராவி பகுதியில் வியாபாரத்திற்காக சென்று தமிழ்நாடு திரும்ப முடியாமல், நோய்க் கிருமித் தொற்றால் பாதிக்கப்பட்டு உயிர் இழந்தவர்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும்.
விவசாயப் பொருட்களைச் சந்தைக்கு கொண்டு செல்ல போதிய வழிகாட்டுதலை அரசு பின்பற்ற வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார். தேனி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற வீரபாண்டி கௌமாரியம்மன் திருக்கோயில் சித்திரைத் திருவிழா வழிபாட்டிற்கும் மங்கலதேவி கண்ணகி கோயில் திருவிழாவிற்கும் சமூக இடைவெளியைப் பின்பற்றி சாஸ்திர சம்பிரதாயத்துடன் சுமார் 100 பேர் வழிபாடு செய்திட வழிவகை செய்ய வேண்டும்” என்றும் அவர் கூறினார்.