தேனி: ஆண்டிபட்டி மேலத்தெருவைச் சேர்ந்தவர், ராஜ்குமார். இவர், வாடகைகக்கு ஆட்டோ ஓட்டி வருகிறார். பகலில் ஆட்டோ ஓட்டிவிட்டு இரவில் ஆண்டிப்பட்டியில் உள்ள ஒரு பெட்ரோல் பங்கில் ஆட்டோவை நிறுத்திவிட்டு செல்வது வழக்கம். இந்நிலையில் கடந்த வியாழன்கிழமை இரவு ராஜ்குமார் வழக்கம் போல நிறுத்திவிட்டு சென்றார்.
அடுத்த நாள் காலை ராஜ்குமார் தனது ஆட்டோவை எடுக்கச்சென்றார். அப்போது, அங்கு ஆட்டோ இல்லாததைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். பல இடங்களில் தேடி பார்த்தும் தனது ஆட்டோவை கண்டுபிடிக்க முடியாததால் இது குறித்து ஆண்டிப்பட்டி காவல் நிலையத்தில் ராஜ்குமார் புகார் அளித்தார்.
இதனையடுத்து அங்கு வந்த காவல் துறையினர், பெட்ரோல் பங்கில் பொருத்தப்பட்டு இருந்த சிசிடிவி மற்றும் அருகில் இருந்த வெவ்வேறு இடங்களில் பொருத்தப்பட்டு இருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர். அப்போது, நள்ளிரவில் ஆட்டோவை இரண்டு பேர் திருடிச்சென்றது தெரியவந்தது.
இருவரில் ஒருவர் ஆட்டோவில் உள்ளே அமர்ந்தும், மற்றொருவர் ஆட்டோவை சிறிது தூரம் தள்ளிச் செல்வதும் தெரியவந்தது. மேலும் அந்த ஆட்டோவை வைகை அணை சாலையில் ஓட்டிச் செல்வதும் தெரியவந்துள்ளது. இந்த திருட்டுச் சம்பவம் குறித்து ஆண்டிப்பட்டி குற்றப்பிரிவு காவல் துறையினர் தீவிர விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: Viral Video: மணல் கொள்ளையை தடுக்க சுவரொட்டி: இளைஞருக்கு அடி உதை