தேனி மாவட்டம் அல்லிநகரம் வெங்கலா நகர் பகுதியைச் சேர்ந்தவர் முனியான்டி(62). கடந்த ஆண்டு டிசம்பர் 29ஆம் தேதி நள்ளிரவில் இவரது வீட்டினுள் நுழைந்த பெண் காவல் ஆய்வாளர் உள்ளிட்ட நான்கு பேர் விசாரணை என்ற பெயரில் வீட்டில் இருந்த நகை, பணம்; நகை அடமான ரசீது போன்றவற்றை எடுத்துச்சென்றுள்ளனர்.
இதனையடுத்து அல்லி நகரம் காவல்நிலையத்தில் இது குறித்து புகார் அளிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்காததால் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் முன்பாக முனியாண்டி தனது குடும்பத்துடன் தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றார்.
இதன் பிறகும் காவல் துறை தரப்பில் எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால் தேனி நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் முனியாண்டி வழக்குத் தொடர்ந்தார்.
வழக்கை விசாரித்த நிதீபதி பன்னீர் செல்வம், வரும் ஆகஸ்ட் 22ஆம் தேதிக்குள் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்யும்படி அல்லிநகரம் காவல் ஆய்வாளருக்கு கடந்த ஜூலை 16ஆம் தேதி உத்தரவிட்டார்.
அதனடிப்படையில் தேனி நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் நேற்று ஆஜரான அல்லிநகரம் காவல் துறையினர் பெரியகுளம் தென்கரை காவல் ஆய்வாளர் மதனகலா, சார்பு ஆய்வாளர் தெய்வேந்திரன், குமரேசன்,முகமது ஹனிபா, கருப்பையா மற்றும் காவலர் மனோகரன் ஆகியோர் மீது கொலைமிரட்டல் விடுத்து ஆபாசமாக பேசியது, நகை பணம் மற்றும் ஆவணங்களை அபகரித்துச் சென்றது உள்ளிட்ட ஏழு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.