தேனி: தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டானது(Jallikattu), தைத்திருநாளான பொங்கலுக்கு மறுநாள் உலக புகழ்பெற்ற அலங்காநல்லூர்(World famous Jallikattu), அவனியாபுரம், பாலமேடு மற்றும் தென் மாவட்டங்களில் ஜல்லிக்கட்டு போட்டிகள் வெகு விமரிசையாக நடைபெறும். இந்த ஜல்லிக்கட்டு போட்டிகளில் தங்களது காளைகளைக் களமிறக்க அதன் உரிமையாளர்கள் காளைகளுக்குத் தீவிர பயிற்சி அளித்து வருகின்றனர்.
இதன் ஒருபகுதியாக, தேனி மாவட்டம், பொம்மைகவுண்டன்பட்டியை சேர்ந்த கல்லூரி மாணவர்கள் ராஜேஷ் மற்றும் அவரது நண்பர்கள் ஒன்றிணைந்து சுமார் ஆறு காளைகளை வளர்த்து வருகின்றனர். சுமார் ஆறு ஆண்டுகளாகக் காளை வளர்ப்பில் ஈடுபட்டு வரும் இவர்கள் தனியார் கல்லூரிகளில் பயின்று வருகின்றனர்.
கல்லூரிக்கு செல்லும் முன்பும் கல்லூரி முடிந்த பின்பும், விடுமுறை நாட்களிலும் தங்களது முதல் வேலையாகக் காளைகளுக்குப் பயிற்சி கொடுப்பதிலே ஆர்வம் காட்டி வருகின்றனர். காலை எழுந்தவுடன், காளைகளுக்குப் பயிற்சி அளிப்பதே தங்களது முதல் கடமையாகக் கொண்டு ஜல்லிக்கட்டு காளைகளுக்குப் பயிற்சி அளித்து வருகின்றனர்.
காளைகளுக்கு தினமும் காலையில் நடைபயிற்சி, ஓட்டப் பயிற்சி, சீறிப்பாயும் பயிற்சி, கொம்புகளை வைத்து குத்தும் பயிற்சி, நீச்சல் பயிற்சி உள்ளிட்டவைகள் கொடுக்கப்பட்டு அவைகளை இன்னும் சில வாரங்களில் நடக்க உள்ள ஜல்லிக்கட்டு போட்டிகளில் பங்கேற்க வைக்க, ஆர்வத்துடன் தயார்ப்படுத்தி வருகின்றனர். இந்நிலையில், இவர்களிடம் சின்ன கருப்பு, மருது உள்ளிட்ட காளைகளை சுமார் ஆறு ஆண்டுகளுக்கு மேலாக இவர்களால் தங்களின் உடன் பிறந்த சகோதரர்களைப் போல், பராமரிக்கப்பட்டு வருகின்றன.
இதனிடையே கடந்த ஆறு ஆண்டுகளாக மதுரை அலங்காநல்லூர், பாலமேடு, அவனியாபுரம், ஜல்லிக்கட்டிலும் தேனி, புதுக்கோட்டை, சிவகங்கை, திருச்சி ஆகிய மாவட்டங்களில் நடைபெறும் ஜல்லிக்கட்டுகளில் பங்கேற்பதற்காக, தொடர்ந்து இக்காளைகளுக்குப் பயிற்சி கொடுத்துப் பங்கேற்று வருகின்றனர்.
இதுவரை பங்கேற்ற ஜல்லிக்கட்டில் மருது மற்றும் சின்ன கருப்பு ஆகிய காளைகள் எங்கும் பிடிபடாமல் பல பரிசுகளை வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது. இனிவரும் ஜல்லிக்கட்டிலும், மருது காளையை சிறப்பாகப் பயிற்சி கொடுத்து பரிசுகளை அள்ளிச் செல்ல இவர்கள் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர். ஒவ்வொரு முறையும் காளைகளை ஜல்லிக்கட்டு களத்தில் இறக்கி விடும்போது அதை பெருமையாகக் கருதுவதாகக் காளை வளர்க்கும் கல்லூரி மாணவர்கள் தெரிவித்தனர்.
இதையும் படிங்க: 'அஞ்சாத சிங்கம் என் காளை' - களம் காண தயாராகும் 12ஆம் வகுப்பு மாணவியின் ஜல்லிக்கட்டு காளை!