தேனி மாவட்டம் பெரியகுளத்தைச் சேர்ந்தவர் சாதிக்பாட்ஷா. வாரப் பத்திரிகை ஒன்றில் செய்தியாளராகப் பணியாற்றி வரும் இவர், நேற்றிரவு தேனியிலிருந்து பெரியகுளம் நோக்கி சென்றுகொண்டிருந்தார். அப்போது, அடையாளம் தெரியாத நபர்களால் தாக்கப்பட்டதில் பலத்த காயமடைந்த அவர், பெரியகுளம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இதனையறிந்த சாதிக்பாட்ஷாவின் உறவினர்கள், பெரியகுளத்தில் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது, அவர்கள் கூறுகையில், “துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வத்தின் சகோதரர் ஓ.ராஜா, பெரியகுளம் கைலாசநாதர் கோயில் பாப்பிபட்டி கண்மாயில் அரசின் அனுமதியின்றி மணல் அள்ளுவதாகக் கிடைத்த தகவலின்படி அங்கு சென்று சாதிக்பாட்ஷா செய்தி சேகரித்துள்ளார்.
மேலும், அதுதொடர்பாக பெரியகுளம் வட்டாட்சியர், வருவாய் ஆய்வாளர் ஆகியோரிடம் அவர் புகாரும் அளித்துள்ளார். இதனையறிந்த ஓ. ராஜா உள்ளிட்ட அவரது ஆள்கள், சாதிக்பாட்ஷாவை தாக்கியுள்ளனர். எனவே தாக்குதல் நடத்தியவர்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றனர்.
இந்தத் தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த பெரியகுளம் காவல் துணை கண்காணிப்பாளர், சம்பவம் தொடர்பாக உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததை அடுத்து மறியலில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர். இதனால், பெரியகுளத்தில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது.
இதையும் படிங்க: "நமக்குப் பொது எதிரி திமுக தான்!"- தேனியில் கர்ஜித்த ஓ.பி.எஸ்!