தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள டி.கள்ளிப்பட்டியைச் சேர்ந்த ஆறுமுகம் என்பவரின் மகன், 2009ஆம் ஆண்டு கர்நாடக மாநிலத்தில் உள்ள முறுக்கு கம்பெனிக்கு வேலைக்காக அழைத்துச் செல்லப்பட்டார். இச்சிறுவன், கர்நாடக மாநிலம் உத்தர கன்னடா மாவட்டத்தில் கும்தா என்ற பகுதியில் உள்ள ராமர் என்பவருக்கு சொந்தமான முறுக்கு கம்பெனியில், ஒன்பது ஆண்டுகளாக கொத்தடிமையாக வாழ்ந்து வந்துள்ளார்.
இந்நிலையில், 2018ஆம் ஆண்டு நவம்பர் மாதம் அங்கிருந்து தப்பித்த சிறுவன் வேலூர் மாவட்டம் காட்பாடியில் உள்ள ஒரு லாரி மெக்கானிக் ஷெட்டில் வேலை பார்த்துவந்துள்ளார். இதனையடுத்து தனது மகனிடம் இருந்து எந்த ஒரு தகவலும் வராத நிலையில் பெரியகுளம் காவல் நிலையத்தில் அவனது பெற்றோர் புகார் அளித்தனர். இது சம்பந்தமாக விசாரணை நடைபெற்று வந்த நிலையில் 2019 ஜூலை மாதம் பெரியகுளத்தில் உள்ள தனது வீட்டிற்கு வந்த சிறுவன், தான் அனுபவித்த கொடுமைகளை தெரிவித்துள்ளார். மேலும் தன்னுடன் சேர்த்து சிறுவர்கள் பலர் இதுபோல் கொத்தடிமைகளாக நடத்தப்படுவது பற்றியும் கூறினார்.
இதுகுறித்து தகவல் அறிந்த தேனி மாவட்ட ஆட்சியர் பல்லவி பல்தேவ், கொத்தடிமைகளாக இருக்கும் சிறுவர்களை மீட்பதற்கு உத்தரவிட்டார். அதன் அடிப்படையில் தொழிலாளர் நலத்துறை அலுவலர், வட்டாட்சியர் மற்றும் பெரியகுளம் காவல் ஆய்வாளர் தலைமையிலான காவல் துறை குழுவினர் சிறுவனுடன் கர்நாடகா சென்றனர். அங்கு கொத்தடிமைகளாக இருந்த மூன்று சிறுவர்களை மீட்டு தேனி மாவட்டத்திற்கு அழைத்து வந்தனர்.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் பேசுகையில், ”குழந்தைகளை கொத்தடிமைகளாக நடத்திய சம்பந்தப்பட்ட நிறுவன உரிமையாளர்கள் மீது சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும். கர்நாடக மாநில அரசு சார்பில் தலா 20 ஆயிரம் ரூபாய் மற்றும் முறுக்கு கம்பெனி உரிமையாளரிடம் இருந்து 2 லட்சம் ரூபாய் பெற்றுத்தரப்படும். குடும்ப சூழல் காரணமாக கொத்தடிமைகளாக வேலைக்கு அனுப்புவதை தவிர்க்கும் பொருட்டு பெற்றோர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும்.
படிக்காத பிள்ளைகளை பெற்றோர் இதுபோன்ற நிறுவனங்களுக்கு கொத்தடிமைகளாக வேலைக்கு அனுப்புவதாக தகவல் வந்துகொண்டிருக்கிறது. மேலும் குழந்தையை விற்கும் பெற்றோர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.