உலகளவில் பல்வேறு நாடுகளை அச்சுறுத்திவரும் கரோனா வைரஸ் தொற்றால் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். இந்தியாவிலும், இந்நோய்த் தொற்று அதிகரித்துவருவதால், நாடு முழுவதும் உள்ள பல்வேறு மாநிலங்கள், மாவட்ட, மாநில எல்லைகளை முடக்கி 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு - கேரளா மாநில எல்லையில் அமைந்துள்ள தேனி மாவட்டத்தில் கரோனா வைரஸ் காரணமாக, குமுளி, கம்பம் மெட்டு, போடி மெட்டு ஆகிய மூன்று மலைச் சாலைகளும் மூடப்பட்டுள்ளன. இதனால் இருமாநிலங்களுக்கு இடையேயான போக்குவரத்தும் துண்டிக்கப்பட்டன.
இந்நிலையில் தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் அருகே உள்ள ராசிங்கபுரம் கிராமத்தைச் சேர்ந்த ஜெயஸ்ரீ, விஜயமணி, மஞ்சுளா, லோகேஷ் என ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 10 பேர், கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் சாந்தாம்பாறை அருகே உள்ள பேத்தொட்டி என்னும் இடத்தில் குடும்பத்துடன் தங்கி ஏலக்காய்த் தோட்டத்தில் பணிபுரிந்துவந்துள்ளனர்.
தற்போது கரோனா முன்னெச்சரிக்கையால் இரு மாநில எல்லைகளும் மூடப்பட்டதன் காரணமாக, இவர்கள் அனைவரும் மேற்குத் தொடர்ச்சி மலைப்பாதை வழியாகத் தங்களது சொந்த ஊரான ராசிங்கபுரத்திற்கு நடைபயணமாக வந்துள்ளனர். இவர்கள் வந்த பாதையில் எதிர்பாராதவிதமாகக் காட்டுத்தீ ஏற்பட்டுள்ளது.
அதிலிருந்து தப்பிப்பதற்காகக் குடும்பத்தினர் அனைவரும் சிதறி ஓடியுள்ளனர். காட்டுத்தீயில் சிக்கிய தகவலறிந்து சம்பவ இடத்திற்கு தீயணைப்பு, மீட்புப் படையினர், வனத் துறை, காவல் துறையினர் என 50-க்கும் மேற்பட்டோர் மலைப்பகுதியில் சிக்கி இருந்தவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.
அடர்ந்த வனப்பகுதி என்பதால் மீட்புப் பணியில் தொய்வு ஏற்பட்டு இரவுவரை நீடித்தது. இந்தக் காட்டுத்தீயில் சிக்கி விஜயமணி (45,) மகேஸ்வரி (33), மஞ்சுளா (2), கிருஷிகா (2) ஆகிய நான்கு பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.
பின்னர், கல்பனா, ஜெயஸ்ரீ, மகேஸ்வரி, முத்தையா ஆகிய நான்கு பேர் காயங்களுடனும், திருமூர்த்தி என்பவர் பலத்த தீக்காயங்களுடனும் மீட்கப்பட்டு தேனி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இவர்களில் ஒண்டிவீரன், லோகேஷ் ஆகிய இருவர் காயமின்றி மீட்கப்பட்டனர். குரங்கணி காட்டுத் தீ விபத்திற்குப் பிறகு, மீண்டும் தேனி மாவட்டத்தில் ஏற்பட்ட இந்தத் தீ விபத்தில் நான்கு பேர் உயிரிழந்த சம்பவம், அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: குரங்கணி தீ விபத்து - ஒரு நீங்காத சு’வடு’