கரோனா நோய்த் தொற்று பரவாமல் கட்டுப்படுத்த நாடு முழுவதும் இரண்டாவது முறையாக ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு, மே 3ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனால் சாலை, ரயில், விமானம், கப்பல் என அனைத்து போக்குவரத்துகளும் நிறுத்தப்பட்டு மாநில, மாவட்ட எல்லைகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. இதனால் வேலை நிமித்தமாக வெளியூரில் இருப்பவர்கள் தங்களது சொந்த ஊர் திரும்ப முடியாமல் தவித்து வருகின்றனர்.
இதன் தொடர்ச்சியாக தேனி மாவட்டம், பெரியகுளம் அருகே பீகார் மாநிலத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள் சுமார் 25 பேர், தங்களது சொந்த ஊருக்குச் செல்ல முடியாமல் முடங்கியுள்ளனர். கொடைக்கானல் மலை அடிவாரத்தில் உள்ள தேனி மாவட்ட எல்லைப்பகுதியான காமக்காபட்டி எனும் இடத்தில் டெல்லியைச் சேர்ந்த ஒரு தனியார் நிறுவனம் வீடுகள் கட்டி விற்பனை செய்யும் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறது.
இந்நிறுனத்திற்கு கட்டடப் பராமரிப்பு, சாலை போடுதல், செக்யூரிட்டி உள்ளிட்ட பல்வேறு வேலைகளுக்காக பீகார் மாநிலத்தைச் சேர்ந்த 25க்கும் மேற்பட்டோரை வேலைக்கு அமர்த்தியுள்ளனர். தற்போது ஊரடங்கு காரணமாக கட்டடப் பணிகள் உள்ளிட்ட வேலைகள் நிறுத்தப்பட்டதால் வருமானம் இன்றி உள்ளனர். இதையடுத்து அந்நிறுவனத்தின் சார்பாக உணவு மட்டும் வழங்கப்படுகிறது.
இதுகுறித்து பீகார் தொழிலாளர்கள் கூறுகையில், 'வறுமையின் காரணமாக மாநிலம் விட்டு மாநிலம் வந்து கடினமாக வேலை செய்து குடும்பத்தைப் பராமரித்து வருகின்றோம். ஆனால், ஊரடங்கு உத்தரவு தொடர்ந்து நீடித்து வருவதால் வருமானம் ஏதும் இன்றி, இங்கு இருப்பதை விட சொந்த ஊருக்குச் செல்வதே நல்லது. எனவே மாவட்ட நிர்வாகம், தமிழ்நாடு அரசு எங்களை சொந்த ஊருக்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்' என கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதையும் படிங்க... வேலையும் இல்ல... பட்டினியால் வாடுறோம்: சொந்த ஊருக்கு புறப்பட்ட வடமாநிலத்தவர்கள்