தேனி மாவட்டம் கம்பத்தைச் சேர்ந்த அப்துல் வாஜுத் (பொறியியல் மாணவர்), ரூபேஷ் (பல் மருத்துவ மாணவர்), ஜெயகாந்தன் (கட்டிடக்கலை மாணவர் ), சுருளிப்பட்டியைச் சேர்ந்த நிக்சய் (மருத்துவ மாணவர்) ஆகியோர் ஊடரங்கு காலத்தை பலனுள்ளதாக பயன்படுத்தும் வகையில் இணையத்தில் 400 நபர்களை தேர்வு செய்தனர்.
அவர்களிடம் குறிப்புகள் மட்டுமே கொடுத்து அதற்கு தகுந்தாற்போல் சார்ட் பேப்பரில் ஓவியம் வரைந்து பதிவேற்றம் செய்யும்படி கேட்டுக்கொண்டனர்.
அதனடிப்படையில் நாட்டின் பல பகுதிகளில் இருந்தும் வெளிநாடுகளில் இருந்தும் பலர் இந்த போட்டியில் பங்கேற்றுள்ளனர். மே 23ஆம் தேதி தொடங்கிய இந்தப் போட்டி ஜூன் 20ஆம் தேதி நிறைவடைந்தது.
இறுதியில் 400 நபர்களால் வரையப்பட்ட ஓவியங்கள் பதிவிறக்கம் செய்து ஒருங்கிணைக்கப்பட்டன. இதில் மருத்துவர், செவிலியர், தூய்மைப் பணியாளர், காவல்துறையினர், செய்தியாளர் ஆகியோர்களின் உருவப்படம் இடம்பெற்றிருந்தது.
கரோனா காலத்தில் அயராது பணியாற்றும் நிஜ ஹீரோக்களுக்கு சமர்ப்பணம் என்ற வாசகமும் எழுதப்பட்டது. இந்த ஓவியத்தை கலாம் உலக சாதனை நிறுவத்தினர் உலக சாதனையாக அங்கீகரித்து கலாம் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் புத்தகத்தில் இடம்பெறச் செய்து சான்றிதழ் வழங்கினர்.
இது குறித்து மாணவர்கள் கூறுகையில், "400 நபர்களும் என்ன படம் வரைகிறோம் எனத் தெரியாமலே வரைந்த ஓவியம் இது. அவற்றை ஒருங்கிணைத்து வித்தியாசமான வண்ணங்களைத் தீட்டி சாதனை ஓவியமாக மாற்றியுள்ளோம்.
கரோனா காலத்தில், நமக்காக பணியாற்றுபவர்களுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக சிறு முயற்சி செய்தோம். ஊரடங்கு காலத்தில் இருக்கும் மாணவர்கள் முதல் அனைவரையும் ஒன்றிணைத்து ஓவியம் வரைந்து கரோனா ஒழிப்பு போராளிகளின் சேவையை போற்றியுள்ளோம்" என தெரிவித்தனர்.
இதையும் படிங்க...'தூய்மைப் பணியாளர்களுக்கு நன்றி' - ஓவியம் வரைந்து உலக சாதனை படைக்கும் குழந்தைகள்