கரோனா வைரஸ் காரணமாக பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கால் நாடு முழுவதும் பல்லாயிரக்கணக்கானோர் வேலைவாய்ப்பின்றியும், வருமானமின்றியும் தவிக்கின்றனர். இதனால் தமிழ்நாடு அரசு சார்பில் நல வாரியத்தில் பதிவு செய்த தொழிலாளர்களுக்கு நிவாரணத் தொகை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.
மேலும் வாரியத்தில் பதிவு செய்யாத முடி திருத்தும் தொழிலாளர்களுக்கும் ரூ. 2 ஆயிரம் நிவாரணம் வழங்கப்படும் என்றும் அரசு அறிவித்தது.
இந்நிலையில் அரசு அறிவித்த நிவாரணத் தொகை தற்போது வரையிலும் வழங்கப்படவில்லை என்று கூறி இன்று தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் முன் முடி திருத்தும் தொழிலாளர்கள் பிச்சை எடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழ்நாடு முடி திருத்தும் தொழிலாளர்கள் நலச்சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் கம்பம் ராஜன் தலைமையில் நடைபெற்ற இந்தப் போராட்டத்தில், முடி திருத்தும் தொழிலாளர்கள் தட்டுடன் தரையில் அமர்ந்து நிவாரண நிதியை உடனடியாக வழங்க வலியுறுத்தி பிச்சை எடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அதன் பின் போராட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளர்கள், தங்களது கோரிக்கை மனுவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலுள்ள புகார் பெட்டியில் போட்டுவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.