தேனி மாவட்டம், சின்னமனூர், கம்பம், பெரியகுளம், ஆண்டிபட்டி, தேனியைச் சுற்றியுள்ள பல்வேறு இடங்களில் வாழை சாகுபடி செய்யப்படுகிறது. ரஸ்தாளி, பூவன், நாட்டு, செவ்வாழை உள்ளிட்ட பல ரகங்கள் பயிரிடப்படுகின்றன. இந்நிலையில் நேற்று இடி, பலத்த காற்றுடன் பெய்த கோடை மழையால், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் வாழை மரங்கள் சரிந்து விழுந்தன. இவற்றில் பெரியகுளம் அருகே உள்ள லட்சுமிபுரம், மதுராபுரி, ஜெயமங்கலம், சிந்துவம்பட்டி குள்ளப்புரம், மற்றும் அதனைச் சுற்றியுள்ள இடங்களில் பயிரிப்பட்டிருந்த சுமார் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட வாழைமரங்கள் சேதமடைந்தன.
இதுகுறித்து மதுராபுரி பகுதியைச் சேர்ந்த வாழை விவசாயிகள் கூறுகையில், "பயிரிட்டு ஒரு வருட காலமாக பராமரிப்பு செய்தோம். தற்போது, ஒரிரு வாரங்களில் அறுவடை செய்யத் தயாராகயிருந்தோம். இந்நிலையில், வாழைமரங்கள் எல்லாம் மண்ணோடு மண்ணாக சாய்ந்து, எங்களுக்கு அதிர்ச்சியைக் கொடுத்துள்ளன.
ஏற்கனவே, கரோனாவால் பிறப்பித்த ஊரடங்கு உத்தரவினால் போதுமான கொள்முதல் விலை கிடைப்பதில்லை. இந்நேரத்தில், இதுபோன்ற இயற்கை சீற்றத்தால் ஏற்படும் இழப்பால் விவசாயிகள் மேலும் நஷ்டம் அடைகின்றோம். எனவே, தமிழ்நாடு அரசு சேதமடைந்த வாழை விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும்" என கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதையும் படிங்க: தேனியில் நடமாடும் உழவர் சந்தை!