தேனி: சபரிமலை ஐயப்பன் மற்றும் முருகன் கோயில்களுக்குச் செல்ல ஒவ்வொரு வருடமும் லட்சக்கணக்கான பக்தர்கள் மாலை அணிந்து விரதமிருப்பது வழக்கம். அந்த வகையில், கார்த்திகை முதல் நாளான இன்று (நவ.17), ஏராளமான பக்தர்கள் மாலை அணிந்து விரதத்தைத் தொடங்கினர்.
கார்த்திகை மாதம் முதல் நாளான இன்று, கேரளா சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறக்கப்பட்டுள்ளது. சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குச் செல்ல ஒவ்வொரு வருடமும் லட்சக்கணக்கான பக்தர்கள் மாலை அணிந்து, கார்த்திகை மாதம் முதல் நாளில் விரதம் தொடங்குவர். கார்த்திகை மாதம் முதல் நாளான இன்று முதல், 48 நாட்கள் சபரிமலை ஐய்யப்பன் கோயிலில் மண்டல பூஜை காலம் நடைபெறும்.
அந்த வகையில், தேனி மாவட்டம், சுருளி மலை புண்ணிய தலத்தில் கம்பம், உத்தமபாளையம், கூடலூர், அனுமந்தன்பட்டி, புதுப்பட்டி, காமயகவுண்டன்பட்டி, சுருளிப்பட்டி உள்ளிட்ட ஊர்களைச் சேர்ந்த ஏராளமான ஐயப்ப பக்தர்கள் மற்றும் முருக பக்தர்கள் சுருளி அருவிக்கு வந்து, மாலை அணிந்து விரதத்தைத் தொடங்கினர்.
அதனைத் தொடர்ந்து, அருவியில் ஐயப்பனுக்கு ஆராட்டும் நடைபெற்றது. பின்னர், சுருளிமலை ஸ்ரீ அய்யப்பசாமி கோயில், பூதநாராயணன் கோயில், சுருளி வேலப்பர் கோயில் உள்ளிட்ட கோயில்களில் குருசாமிகள் மூலம் பக்தர்கள் மாலை அணிந்து கொண்டனர்.
முன்னதாக சுருளிமலை ஸ்ரீ அய்யப்பசாமி கோயில் உற்சவருக்கு குருசாமி கதிரேசன், டிரஸ்டி பொன்காட்சிக் கண்ணன் தலைமையில் 9ஆம் ஆண்டு ஆராட்டு நடைபெற்றது. இதையடுத்து விரதமிருந்த பக்தர்கள் கருப்பு, காவி உடை அணிந்து, குருசாமி கையால் மாலை அணிந்து சபரிமலை யாத்திரைக்கான விரதத்தைத் தொடங்கினர்.
இந்நிலையில், போடிநாயக்கனூரில் ஐயப்பனுக்கு விரதம் மேற்கொண்டு மாலை அணிவதற்காக கடைகளில் பூஜை பொருள்கள் வாங்க பக்தர்களின் கூட்டம் அலைமோதியது. பூஜைக் கடைகளில் பக்தர்களின் விருப்பத்திற்கு ஏற்றவாறு சந்தன மாலை, ஜவ்வாது மாலை, ருத்ராட்ச மாலை, பாசிமணி மாலை, துளசி மணி மாலை போன்ற பல்வேறு ரக மாலைகள் பல வண்ணங்களில் விற்பனை செய்யப்பட்டது.
மேலும், பல வண்ண ஐயப்பன் டாலர்கள் மற்றும் ஐயப்ப பக்தர்கள் உடுத்தும் கருப்பு, காவி மற்றும் பச்சை நிற வஸ்திரங்கள் விற்பனை செய்யப்பட்டது. கார்த்திகை விரதம் இருப்பவர்கள் கோயிலுக்குச் செல்வதற்காக, மாலைகள் மற்றும் ஏலக்காய் மலைகள் தயாரிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இது போன்று, பெரியகுளம் அருள்மிகு பாலசுப்பிரமணியர் திருக்கோயிலின் அருகே அமைந்துள்ள வராக நதி ஆற்றில், பெரியகுளத்தைச் சுற்றியுள்ள வடுகபட்டி, கீழ வடகரை, புதுப்பட்டி, லட்சுமிபுரம், மேல்மங்கலம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் இருந்து 500க்கும் மேற்பட்ட பக்தர்கள் நீராடி, விநாயகர் சிலை முன்பாக பூஜை செய்து, பின்னர் குருசாமி மூலம் மாலை அணிந்து விரதத்தைத் துவங்கினர்.
இந்நிலையில், சுருளி அருவியில் யானை நடமாட்டம் இருப்பதால், மாலை அணிந்து அருவியில் நீராடுவதற்காக வெகு தொலைவில் இருந்து வந்த பக்தர்கள், அருவியில் குளிப்பதற்கு வனத்துறையினர் அனுமதி மறுத்ததால் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.
இதையும் படிங்க: திருச்செந்தூர் கோயில் தரிசனக் கட்டண உயர்வை ரத்து செய்யக் கோரி போராட்டம்.. பக்தர்கள் - போலீசார் இடையே தள்ளுமுள்ளு!