தேனி: கொண்டாட்டங்கள் மனித வாழ்க்கையின் நம்பிக்கை ஜீவ ஊற்று. கொண்டாட்டங்களின்போது தான் நாம் சகமனிதர்களைத் திரும்பி பார்க்கிறோம். நம் சந்தோஷங்களை அவர்களுடன் பகிர்ந்து கொள்ள நினைக்கிறோம். இப்படியான நம் அன்பை, அக்கறையை மற்றவர்களுடன் பகிர்வதில் முதலிடத்தில் இருக்கிறது பண்டிகைகள்.
இந்தப் பண்டிகை காலத்தில், நம்முடைய அக்கறைக்காகவும் தன் மீது விதவிதமான வண்ணமேற்றி கண்கவரக் காத்திருக்கிறது சக்கம்பட்டி சேலைகள்...
பெயரை எங்கோ கேட்டதாக ஞாபகம் வருகிறதா, 'முதல் மரியாதை' திரைப்படத்தில் நிலாவைக் கொஞ்சம் கையில் பிடித்த வைரமுத்து, 'சக்கம்பட்டி சேலை கட்டி பூத்திருக்கு பூஞ்சோலை' என பூஞ்சோலைக்கு சேலை கட்டி அழகு பார்த்திருப்பார். அத்தகைய தனித்துவம் மிக்கவை சக்கம்பட்டி சேலைகள். அதைத் தான் கரோனா பெருந்தொற்று கொஞ்சம் அசைத்துப் பார்த்திருக்கிறது.
தேனி மாவட்டம், ஆண்டிபட்டி தாலுகா, சக்கம்பட்டி மற்றும் அதனைச் சுற்றியுள்ள டி.சுப்புலாபுரம், முத்துகிருஷ்ணாபுரம், சண்முகசுந்தரபுரம், கொப்பையம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் கரோனா காலத்திற்கு முன்னர், இடைவிடாமல் கேட்டுக் கொண்டிருந்தது சிறுவிசைத் தறி ஓடும் சத்தம். இங்கு சுமார் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சிறு விசைத்தறி கூடங்கள், செயல்பட்டு வருகின்றன.
இந்த விசைத்தறிக் கூடங்களை, அதன் உபதொழில்களை நேரடியாகவும், மறைமுகமாகவும் நம்பி சுமார் 20 ஆயிரத்திற்கும் அதிகமானவர்கள் உள்ளனர்.
இயற்கையான பருத்தியால் நெய்யப்படும் சக்கம்பட்டி சேலைகளுக்கு தமிழ்நாடு தாண்டி கர்நாடகா, ஆந்திரா, கேரளா என வெளி மாநிலங்களிலும் மவுசு அதிகம். காலத்திற்கேற்ப தன்னை மாற்றிக் கொண்ட சக்கம்பட்டி சேலைகள், தற்போது சுங்கடி காட்டன், செட்டிநாடு காட்டன், பேப்பர் காட்டன், கோடம்பாக்கம் காட்டன், பாலி காட்டன், 60க்கு 60, உள்ளிட்ட ரகங்களில் நாளொன்றுக்கு ஏறக்குறைய 14 ஆயிரம் சேலைகள் வரை உற்பத்தி செய்யப்படுகின்றன.
ஆராவாரம் இல்லாமல் சென்று கொண்டிருந்த வாழ்க்கைச் சக்கரத்தில் வழியில் விழுந்த கல்லாக தடுத்தது கரோனா தொற்றும் அது சார்ந்த ஊரடங்கும். கடந்த மார்ச் மாத இறுதியில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட, புதிய உற்பத்திக்கு வழியில்லாமலும், நெய்து வைத்த சேலைகளை வெளியே அனுப்ப வழியில்லாமலும் தேக்கமடைந்தன. இந்த தேக்கம் தந்த பாதிப்பு மட்டும் 10 கோடி ரூபாய் வரை வருமானம் இழப்பு.
மூன்று மாதங்கள் மூச்சடக்கி காத்திருந்த உலகம், கொஞ்சம் எழுந்து நடக்கத் தொடங்க, ஜவுளிக்கடைகளில் தேங்கியிருந்த துணிகள் விற்பனையாகாமல், வியாபாரிகள் புதிதாக சேலைவாங்க வரவில்லை. ஆடிய காலும் பாடிய வாயும் சும்மாயிருக்காது என்ற சொலவடை உழைப்பவனுக்கும் பொருந்தும். உழைத்துப் பழகிய நெசவாளர்கள் கையிருப்பு மூலதனத்தில் மீண்டும் உற்பத்தியில் இறங்கிவிட்டனர்.
'கரோனாவிற்கு முன் தினமும் வேலையிருந்த எங்களுக்கு இப்போ தினசரி வேலை கிடைப்பதில்லை. தீபாவளி பண்டிகைக்காக உற்பத்தி தொடங்கி இருந்தாலும், அரசு உத்தரவுப்படி 50% பேர் தான் அனுமதிக்கப்படுகின்றனர். இதனால் 10 பேர் வேலை செய்யுற இடத்தில 5 பேருக்கு மட்டுமே வேலையிருக்கு. இதனால், சிலர் நெசவுத் தொழிலை கைவிட்டுட்டு கட்டட வேலைக்கும் மாற்றுத் தொழிலுக்கும் மாறிட்டாங்க' என வார்த்தைகளில் வேதனையை வெளிப்படுத்துகிறார், நெசவாளர் பாண்டியன்.
'இந்த நெருக்கடியான கால கட்டத்தில ஜி.எஸ்.டி கட்டுறதுல, மத்திய அரசும் நெசவாளர்களுக்கு கால அவகாசம் தரணும். அதே மாதிரி தேங்கியிருக்கும் மொத்த சேலைகளையும் அரசு கொள்முதல் செய்து, எங்களோட துயர் துடைச்சு, எங்க வாழ்க்கையில் தீப ஒளியை ஏத்தணும். இல்லைனா இந்த தீபாவளி கறுப்பு தீபாவளியாகத் தான் இருக்கும்' நெசவாளி செல்வத்தின் வார்த்தைகளை முந்திக்கொண்டு வழிகிறது, கண்ணீர்.
பொதுவாக சக்கம்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டாரங்களில், ஆண்டுக்கு 60 முதல் 80 கோடி ரூபாய் வரை ஜவுளி வர்த்தகம் நடைபெறும். இதில் 80 விழுக்காடு வியாபாரம் ஓணம், தீபாவளிப் பண்டிகை காலங்களில் தான் நடக்கிறது. இந்த ஆண்டு ஏற்பட்ட கரோனா பெருந்தொற்று ஜவுளி வர்த்தகத்தை முற்றிலும் வீழ்ச்சியடைய வைத்துள்ளது.
இருந்தும் வீழ்வேனென்று நினைத்தாயோ என, மீண்டு(ம்) எழுந்து நிற்கின்றனர், நெசவாளர்கள். இந்த தீபாவளிக்காக, எம்பிளாஸ்ட் காட்டன், சில்க் காட்டன், 120ஆம் எண் காட்டன் உள்ளிட்ட புது ரகங்களை அறிமுகப்படுத்தியுள்ளனர் சக்கம்பட்டி நெசவாளர்கள், மனிதர்களின் மீதான நம்பிக்கையை இன்னும் இழந்து விடாமல்.
தங்களின் மீட்சி கதையைப் பேசுகிறார், நெசவாளி சுந்தர், '6 மாசத்துக்கு மேலாக முடங்கியிருந்த எங்களுக்கு, இந்த தீபாவளி பண்டிகை ஏதோ குறைந்தபட்ச வேலையைக் கொடுத்திருக்கு. உற்பத்தியான எல்லா சேலைகளையும் விற்பனைக்கு அனுப்பும் வேலை நடக்கிறது. எங்களோட வாழ்வாதாரம் மேம்பட, பொதுமக்கள் இந்த தீபாவளிக்கு பாரம்பரியமான காட்டன் சேலைகளை வாங்கணும்' என விருப்பமும் வேண்டுகோளுமாகப் பேசுகிறார்.
கனிகளின் சுவையை ருசிக்கும் மனித சமூகம், வேர்களின் வலியை ஒரு நாளும் எண்ணிப் பார்ப்பதில்லை. உணவின் ருசியில் பசியாறுகிறவர்கள், அதை விளைவித்தவனின் வாழ்க்கையை யோசிப்பதே இல்லை. இப்படி நாம் நதி மூலம் தேடாத பட்டியல் நீளும்... இந்தப் பட்டியலில் ஒரு அங்கம் தான் நெசவாளர்கள்...
கையடக்கப்பேசியில், விரல்களின் நுனியில் வாழ்ந்து பார்க்கும் இளைய தலைமுறை தான் முன் எப்போதையும் விட, தன் வேர் தேடி ஓடுகிறது. அந்த நம்பிக்கையினால் கை பிடித்து காத்திருக்கின்றன, சக்கம்பட்டி சேலைகள்...!
இதையும் படிங்க : 'பனங்கொட்ட தாத்தா தெரியுமா?' - பாரம்பரியத்தை காக்க போராடும் இளைஞர்!