தேனி மாவட்டம் மேகமலை வனச்சரகத்திற்குட்பட்ட பொம்முராஜபுரம் தெற்கு மலைப் பகுதியில் வனவர் சரவணக்குமார் தலைமையிலான வனக்காவலர்கள், நேற்று ரோந்துப்பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது காமன் கல்லூரைச் சேர்ந்த முருகன் (53) கூமாபட்டி அருகேயுள்ள காஞ்சாபுரத்தை சேர்ந்த பிச்சைமணி(35) ஆகியோர் மலைப்பகுதியில் அரசு அனுமதி இல்லாமல் மலையில் மாடுகளை மேய்த்து கொண்டிருந்தனர்.
இதனை வனவர் சரவணக்குமார் கண்டித்துள்ளார். மேலும் மாடுகளை வனப்பகுதியை விட்டு கீழே கொண்டு செல்லுமாறு வற்புறுத்தியதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் காமன் கல்லூரிலிருந்து குமனன்தொழு வழியாக இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த வனவர் சரவணக்குமாரை மறைந்திருந்த அடையாளம் தெரியாத நபர்கள் கல்லால் தாக்கி விட்டு ஓடிவிட்டனர்.
இதில் காயமடைந்த வனவர் சரவணக்குமார் தேனி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இது தொடர்பாக வனக்காப்பாளர் அப்துல்கபூர் அளித்த புகாரின் அடிப்படையில் முருகன், பிச்சைமணி ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.