தேனி மாவட்டத்தில் அரசு பொருட்காட்சி வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள வேளாண் துறையின் சாதனை விளக்க கண்காட்சியை ரிப்பன் வெட்டி திறந்து வைத்து, துறை சார்ந்த பல்வேறு நலத்திட்ட உதவிகளை துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வழங்கினார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் பல்லவி பல்தேவ், மற்றும் அரசு துறை அதிகாரிகள், எம்.பி.பார்த்திபன், கம்பம் எம்.எல்.ஏ ஜக்கையன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இதில், 258 பயணாளிகளுக்கு ரூ.7 கோடியே 87லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார். முன்னதாக கடந்த 45 நாட்களாக இயங்கி வரும் அரசு பொருட்காட்சி மற்றும் கண்காட்சியில் சிறப்பாக அரங்கம் அமைத்த துறையினருக்கு கேடயங்கள் வழங்கப்பட்டது. நிகழ்ச்சி முடிந்து செய்தியாளர்களிடம் பேசிய ஓ.பன்னீர்செல்வம், விலகி சென்றவர்கள் மனம் திருந்தி அதிமுக இணைய வேண்டும். அவர்கள் அடிப்படையிலிருந்து கட்சிக்கு உழைத்து படிப்படியாக முன்னேற வேண்டும். ஒரு தொண்டன் கூட அதிமுகவில் தலைவராக, முதலமைச்சராக முடியும். அதற்கான தகுதியும் திறமையும் அவர்கள் தான் வளர்த்துக் கொள்ள வேண்டும்.
தமிழக அரசியலை பொறுத்தவரை எந்த அரசியல் இயக்கமும் இதுவரை யாரும் கூட்டணியை முடிவு செய்யவில்லை. அதிமுக தேசிய மாநில கட்சிகளுடன் கூட்டணிக்கு பேசி வருகிறோம், விரைவில் மன நிறைவான முடிவு எட்டப்படும். எந்த நேரத்தில் எப்போது நாடாளுமன்ற தேர்தல் வந்தாலும், 21 சட்டமன்ற இடைத் தேர்தல் வந்தாலும் உறுதியாக அதிமுக வெற்றியை தக்க வைத்து கொள்ளும்", என்றார்.