தேனி மாவட்டம், கூடலூர் அருகே உள்ள குள்ளப்பகவுண்டன்பட்டியைச் சேர்ந்தவர் அம்மாவாசி. விவசாயியான இவருக்கு மேற்குத்தொடர்ச்சி மலையடிவாரம் அருகில் உள்ள மட்டப்பாறைப் பகுதியில் சொந்தமான விவசாய நிலம் உள்ளது. அந்த நிலத்தை சீர்படுத்தும்போது, புதைந்திருந்த முதுமக்கள் தாழி ஒன்று கிடைத்தது. மேலும் அந்த தாழியை வெளியில் எடுத்துப் பார்த்த போது, அதில் மனித எலும்புகள், மண் ஜாடி மற்றும் சிறு மண் பாண்டங்கள் இருப்பது தெரியவந்தது.
இதுகுறித்து தகவலறிந்து வந்த தேனியைச் சேர்ந்த வைகை தொல்லியல் கழக அமைப்பினர், முதுமக்கள் தாழியை ஆய்வு செய்தனர். ஆய்வுக்குப் பின்னர் வைகை தொல்லியல் கழக அமைப்பாளர் மோகன் குமாரமங்கலம் ஈடிவி பாரத் தமிழ்நாடு ஊடகத்திடம் பேசுகையில், "இறந்தவர்களை தாழியில் வைத்து அடக்கம் செய்வது 2,500 ஆண்டுகளுக்கு முந்தைய பழமையான வழக்கம். இங்கு கண்டெடுக்கப்பட்ட தாழியில் புதைக்கப்பட்டவரின் எலும்புகளும், அவரது ஈமச் சடங்குக்குப் பயன்படுத்திய மண் பாண்டங்களும் கிடைத்துள்ளன.
ஆச்சரியமாக தாழியின் உள்ளே பானைகள் வேதி வண்ணம் பூசப்பட்டவையாக உள்ளன. எனவே, இதனருகில் பழங்கால குடியிருப்பும் இருந்திருக்க வேண்டும். முதுமக்கள் தாழி கிடைத்தப் பகுதியின் அருகில் ஆய்வு செய்தால், கீழடியைப் போல் மேலும் ஒரு தமிழர் நாகரிக நகரத்தையும் கண்டுபிடிக்க முடியும்.
அதேபோல் குள்ளப்பகவுண்டன்பட்டி அருகில் உள்ள சுருளிப்பட்டி, நாராயணத்தேவன்பட்டி, கூடலூர் திரள்மேடு, தம்மணம்பட்டி ஆகியப் பகுதியில் நடத்திய ஆய்வுகளில் பழங்காலத்து கத்திகளும், வாள்களும், இரும்புப் பொருட்களும் கிடைத்துள்ளன.
பாண்டியர் மற்றும் சேரர் ஆட்சிக்காலங்களின்போது இந்தக் கிராமங்கள் வழியாக வணிகர்கள் பயணம் செய்திருக்க வேண்டும். இப்பகுதியில் 2 ஆயிரத்து 500 ஆண்டுகளுக்கு முன்பு, ஒரு வளமான சமூகம் வாழ்ந்ததற்கான ஆதாரம் உள்ளது" இவ்வாறு தெரிவித்தார்.
இதையும் படிங்க: கரோனா எதிரொலி: கீழடி அகழாய்வு தற்காலிகமாக நிறுத்தம்