தேனி: அதிமுகவில் உட்கட்சி மோதல் உச்சகட்டத்தை எட்டியுள்ளது. இந்நிலையில் ஓபிஎஸ்க்கு ஆதரவாக திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த கட்சி நிர்வாகிகள், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் அன்பழகன் மற்றும் சுப்புரத்தினம் தலைமையில் 500க்கும் மேற்பட்டோர் பெரியகுளம் அருகே உள்ள பண்ணை வீட்டில் ஓபிஎஸ்ஸை சந்தித்து தங்களது ஆதரவை தெரிவித்தனர்.
அவர்களுக்கு நன்றி தெரிவித்து பின்னர் அவர்கள் மத்தியில் பேசிய ஓபிஎஸ், அதிமுகவின் தற்போது அசாதாரணமான சூழல் நிலவுகிறது. ஏன் ஏற்பட்டது யாரால் ஏற்பட்டது என்பதை தொண்டர்கள் மறக்கக்கூடாது. பேரறிஞர் அண்ணா கூறியபடி எதிர்க்கட்சியாக இருக்கும் போது சகிப்புத்தன்மையோடும் பக்குவத்தோடும் நடந்து கொள்ள வேண்டும்.
எடப்பாடி பழனிசாமி கூட்டிய 23ஆம் தேதி நடைபெற்ற பொதுக்குழு கூச்சல் குழப்பங்கள் மத்தியில் கூட்டப்பட்டது. வரம்பு மீறிய செயல்கள் அந்த பொதுக்குழுவில் அரங்கேறியதாகவும் எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகிய இரு பெரும் தலைவர்கள் வகுத்து தந்த பாதையில் அனைவரும் உண்மையாக ஒன்றிணைந்து பணியாற்ற வேண்டும் என்று பேசினார்.
அதிமுகவில் ஜானகி அணி, ஜெயலலிதா அணி என பிரிந்து இருந்தபோது திமுக அப்பொழுது ஆட்சியை கைப்பற்றியது. எனவே பொறுமையாக ஒன்றிணைந்து பணியாற்ற வேண்டும். அவ்வாறு பணியாற்றி வேண்டும் என்பது மக்களின் விருப்பமாக உள்ளது. எம்ஜிஆர் ,ஜெயலலிதா காலத்தில் அதிமுகவில் இணைந்து பணியாற்றியவர்கள் மீண்டும் இணைந்து பணியாற்ற வேண்டும்.
தான் முதலமைச்சர் பதவிக்கு கட்சியின் தலைமை பதவிக்கு ஆசைப்படவில்லை. ஒற்றுமையாக கட்சியை வழிநடத்த வேண்டும் என்பதே தனது எண்ணம் என்றார்.
இதையும் படிங்க:தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்திற்குச்சொந்தமான வீட்டை சொந்தம் கொண்டாடியவருக்கு ரூ.1 லட்சம் அபராதம்...