தேனி: அதிமுகவில் ஒற்றைத் தலைமை விவகாரம் பூதாகரமாகியுள்ள நிலையில், அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தென் மாவட்டங்களில் சுற்றுப்பயணமும், அதேநேரம் சசிகலா வட தமிழ்நாட்டின் முக்கிய ஊர்களில் சுற்றுப்பயணமும் மேற்கொண்டுள்ளனர்.
இந்த நிலையில், அதிமுக தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் தலைமை நிலையச் செயலாளர் நேற்று (ஜூன் 26) அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அதில், "அதிமுக தலைமைக் கழக நிர்வாகிகள் கேட்டுக் கொண்டதற்கு இணங்க, ஜூலை 27ஆம் தேதி (இன்று) காலை எம்ஜிஆர் மாளிகையில் தலைமைக் கழக நிர்வாகிகள் கூட்டம் நடைபெற உள்ளது.
இக்கூட்டத்தில் தலைமைக் கழக நிர்வாகிகள் அனைவரும் கலந்துகொள்ளுமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறேன்" என குறிப்பிடப்பட்டிருந்தது. குறிப்பாக, தலைமை நிலையச் செயலாளர் என்பது எடப்பாடி பழனிசாமியின் கட்சிப்பதவி என்பது நினைவுகூரத்தக்கது. இந்த அறிக்கையில், ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோரின் பெயர்கள் குறிப்பிடப்படவில்லை.
இதனையடுத்து, அறிக்கைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் நேற்றிரவு (ஜூன் 26) அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அதில், "அஇஅதிமுகவின் சட்ட, திட்ட விதி 20A(v)-ன்கீழ் கழகத்தின் ஒட்டுமொத்த நிர்வாக பொறுப்புகள் ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளருக்கே உள்ளது.
அதன்படி, இருவரின் ஒப்புதலைப் பெற்றுத்தான் எந்தவிதமான கூட்டமும் கூட்டப்பட வேண்டும். ஆனால், இருவருடைய ஒப்புதலும் இன்றி, கையொப்பம் இல்லாமல், 'கழக தலைமை நிலையச் செயலாளர், தலைமைக் கழகம்' என்ற பெயரில் கட்சி சட்ட, திட்ட விதிக்கு எதிராக ஓர் அறிவிப்பு வெளியிடப்பட்டு இருக்கிறது.
அந்த அறிவிப்பில், அஇஅதிமுக தலைமைக் கழக நிர்வாகிகள் கேட்டுக் கொண்டதற்கு இணங்க திங்கட்கிழமை
(இன்று) காலை 10 மணிக்கு, தலைமை அலுவலகமான எம்ஜிஆர் மாளிகை கூட்ட அரங்கில் தலைமைக் கழக நிர்வாகிகள் கூட்டம் நடைபெற உள்ளதாகவும், அந்தக் கூட்டத்தில் தலைமைக் கழக நிர்வாகிகள் அனைவரும் கலந்து கொள்ளுமாறும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
அஇஅதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் என்ற முறையில் நான் எந்தவிதமான ஒப்புதலையும் மேற்படி கூட்டத்திற்கு அளிக்கவில்லை. இப்படிப்பட்ட நிலையில், விதியை மீறி கூட்டப்பட்டுள்ள மேற்படி கூட்டம், கட்சி சட்டம் மற்றும் விதிகளுக்கு புறம்பானதாகும். கட்சி சட்டத் திட்டத்திற்கு புறம்பாக கூட்டப்பட்டுள்ள மேற்படி கூட்டத்தில் ஏதேனும் முடிவுகள் எடுக்கப்பட்டால் அது ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் நிர்வாகத்தில் இருக்கும் கட்சியையும், கட்சித் தொண்டர்களையும் எவ்விதத்திலும் கட்டுப்படுத்தாது என்பதை தொண்டர்கள் அனைவருக்கும் தெரிவித்துக் கொள்கிறேன்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
சென்னையில் இருந்து நேற்று விமானம் மூலம் மதுரை வந்த ஓ. பன்னீர்செல்வம், சாலை மார்க்கமாக தேனி பெரியகுளத்திற்கு சென்று தனது முதல்கட்ட சுற்றுப்பயணத்தை தொடங்கினார். மேலும், தேனியில் மூன்று நாட்கள் தனது ஆதரவாளர்களை சந்திக்க திட்டமிட்ருந்த ஓபிஎஸ், இன்று திடீரென சென்னை திரும்ப உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: அதிமுகவில் அடுத்து என்ன? - தெற்கே ஓபிஎஸ், வடக்கே சசிகலா சுற்றுப்பயணம்?!