தேனி மாவட்டம் போடி அருகே உள்ளது டொம்புச்சேரி கிராமம். இங்கு சுமார் 1500-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்துவருகின்றன. இப்பகுதியில் உள்ள கிழக்கு காலனி பகுதியில் முருகன்-பூவாயி என்ற வயதான தம்பதியினர் வசித்துவருகின்றனர். இவர்களுக்கு ஒரு மகனும் ஒரு மகளும் உள்ளனர். மகளை திருமணம் செய்துகொடுத்த சூழ்நிலையில் மகன், கணவர் செய்யும் கூலி வேலையில் கிடைக்கும் வருமானத்தை நம்பியே வாழ்ந்துவந்துள்ளனர்.
இந்நிலையில் கடந்த ஒருவார காலமாக பூவாயி காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளார். மருத்துவமனைக்கு சிகிச்சைக்குச் செல்லாமல் வீட்டிலே இருந்துவந்துள்ளார். இந்நிலையில் காய்ச்சல் அதிகரித்ததன் காரணமாக பூவாயி பரிதாபமாக உயிரிழந்தார்.
பூவாயி வசிக்கும் பகுதியில் துப்புரவுப் பணியாளர்கள் சரிவர சுத்தம் செய்யாமல் அப்பகுதி குப்பைக் கூளமாக இருப்பதாகவும், இதுபற்றி பஞ்சாயத்து நிர்வாகத்திடம் பலமுறை கோரிக்கைவிடுத்தும் போதுமான நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் அப்பகுதி மக்கள் குற்றஞ்சாட்டினர்.
தொடர்ந்து சுகாதாரக்கேடான சூழ்நிலையில் இருப்பதால் பலர் காய்ச்சலால் பாதிக்கப்படுவதாகவும், மேலும் ஒரு உயிர்ப்பலி ஏற்படுவதற்கு முன், தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கைவிடுத்துள்ளனர்.
இதையும் படிங்க: 'அது என்ன குஜராத்திக்கு மட்டும் ஸ்பெஷல் சலுகை' - மத்திய அரசுக்கு மம்தா கேள்வி