தேனியில் புதிதாக கட்டப்பட உள்ள அரசு கால்நடை மருத்துவக் கல்லூரி தொடர்பான ஆலோசனைக் கூட்டம் ஆட்சியர் அலுவலகத்தில் இன்று (செப்டம்பர் 10) நடைபெற்றது. இக்கூட்டத்தில், துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், மாவட்ட ஆட்சியர் பல்லவி பல்தேவ் உள்பட பலர் பங்கேற்றனர். இதில் புதிய கட்டடத்தின் மாதிரி தோற்றம், கட்டுமானப் பணிகள் உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்கப்பட்டது.
கூட்டம் முடிந்த பின் வெளியே வந்த துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்திடம், பொதுமக்கள் பலர் கோரிக்கை மனுக்களை அளித்தனர். அப்போது, உடல் நலக்குறைவால் சிகிச்சைப் பெற்று வரும் தனது மனைவிக்கு, முதியோர் உதவித்தொகை கேட்டு விண்ணப்பம் செய்திருப்பது குறித்து, பெரியகுளத்தை அடுத்த ஜி.கல்லுப்பட்டியைச் சேர்ந்த பாஜக கிளைச் செயலாளரான மகாராஜன் என்ற பாலசுப்ரமணி என்பவரும் மனு அளிக்க முற்பட்டார்.
ஆனால், கூட்டம் அதிகரித்ததை கண்டு அதிமுக மாவட்டச் செயலாளர் சையது கான், பாலசுப்ரமணியை தடுத்து நிறுத்தியதால் இருவருக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் ஒருக்கட்டத்தில் துணை முதலமைச்சர், மாவட்ட ஆட்சியர் ஆகியோர் அருகில் இருப்பதையும் மறந்து, இருவரும் ஒருவரையொருவர் ஒருமையில் பேசி கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது பாலசுப்ரமணி அதிமுகவினரை பார்த்து ’கூட்டணிக்கு வருவீங்கள்ள...’ என்று சொன்னதும், கைகலப்பாகும் சூழல் உருவானது. இதையடுத்து, அலுவலர்களும், அதிமுகவினரும் மாவட்டச் செயலாளரை சமாதானம் செய்து அழைத்துச்சென்றனர். இதனால் சிறிது நேரம் அப்பகுதி பரபரப்பாக காணப்பட்டது.
இதையும் படிங்க: 'தமிழ்நாட்டில் இரு மொழி கொள்கையே தொடரும்' - அமைச்சர் செங்கோட்டையன்