தமிழகத்தில் 30-வது சாலை பாதுகாப்பு வாரவிழா இந்த ஆண்டு (2019) பிப்ரவரி 4 முதல் 10-ம் தேதி வரை கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
இதனைத்தொடர்ந்து, தேனி மாவட்டத்தில் வட்டாரப் போக்குவரத்துத் துறை சார்பில் இன்று (பிப்.9) விழிப்புணர்வு பேரணி நடத்த திட்டமிடப்பட்டது. இந்த விழிப்புணர்வு பேரணியை துணை முதலமைச்சரும், அதிமுகவின் தலைமை ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர்செல்வம் கொடியசைத்து தொடங்கிவைத்தார்.
பின்னர் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு குறித்த துண்டு பிரசுரங்களை வாகன ஓட்டுநர்களிடம் விநியோகித்தார்.
தேனி புதிய பேருந்து நிலையத்தில் தொடங்கிய இந்த பேரணியானது புறவழிச்சாலையில் தொடங்கி, பழைய பேருந்து நிலையம் உள்ளிட்ட நகரின் முக்கிய வீதிகள் வழியாக சென்று நேரு சிலை சந்திப்பில் நிறைவு பெற்றது.
காவல் துறையினர், ஓட்டுநர் பயிற்சி பள்ளி மாணவர்கள், ஆம்புலன்ஸ் பணியாளர்கள் உள்பட சுமார் 50-க்கும் மேற்பட்ட இருசக்கர, நான்கு சக்கர வாகன ஓட்டிகள் இந்த விழிப்புணர்வு பேரணியில் பங்கேற்றனர்.
இந்த நிகழ்ச்சியில் தேனி மாவட்ட ஆட்சியர் பல்லவி பல்தேவ், எம்.பி. பார்த்திபன், கம்பம் எம்.எல்.ஏ. ஜக்கையன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.