தேனி மாவட்டத்தில் கரோனா தொற்று அதிவேகமாகப் பரவிவருகிறது. இதனைக் கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம், உள்ளாட்சி, நகர்ப்புற நிர்வாகங்கள் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் எடுத்துவருகின்றன. இருப்பினும், மாவட்டத்தில் தொற்று குறைந்தபாடில்லை. நேற்று ஒரே நாளில் ஆறு குழந்தைகள் உள்பட 131 நபர்களுக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.
தற்போது, தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 2,732ஆக அதிகரித்துள்ளது. இவற்றில் தற்போதுவரை 1,465 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 1,231 பேர் தொடர் சிகிச்சையில் உள்ளனர்.
அரண்மனைப்புதூரைச் சேர்ந்த 85 வயது முதியவர், தேனியைச் சேர்ந்த 75 வயது மூதாட்டி, நாரயணத்தேவன்பட்டி கிராமத்தைச் சேர்ந்த 51 வயது நபர், சின்னமனூரைச் சேர்ந்த 49 வயது பெண் என நான்கு பேர் ஒரே நாளில் உயிரிழந்துள்ளனர். இதன் காரணமாக கரோனாவால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 36ஆக உயர்ந்துள்ளது.
மாவட்டத்தில் தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில்தான் தொடக்கத்தில் கரோனா தொற்று சிறப்பு சிகிச்சை மையம் தொடங்கப்பட்டது. இதனையடுத்து பெரியகுளம், போடி, கம்பம் அரசு மருத்துவமனைகள், ஓடைப்பட்டி ஆரம்பச் சுகாதார நிலையங்களில் சிகிச்சை மையங்கள் ஏற்படுத்தப்பட்டன.
தொடர்ந்து அதிகரித்த தொற்று பரவலால், தேனி என்.ஆர்.டி. நினைவு அரசு மருத்துவமனை, தேக்கம்பட்டி அரசினர் பல்வகை தொழில்நுட்பக் கல்லூரி, போடிநாயக்கனூர் அரசுப் பொறியியல் கல்லூரி, வடபுதுப்பட்டி தனியார் பொறியியல் கல்லூரி, கொடுவிலார்பட்டி தனியார் பொறியியல் கல்லூரி, உத்தமபாளையம் தனியார் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, குள்ளப்புரம் தனியார் வேளாண்மை கல்லூரி, சித்த மருத்துவம் மேற்கொள்ளுவதற்கு ஏதுவாக பெரியகுளம் தனியார் கலை மற்றும் அறிவியல் கல்லூரி என மொத்தம் எட்டு இடங்களில் கரோனா சிறப்பு சிகிச்சை மையங்கள் அமைக்கப்பட்டு, சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது.
இந்நிலையில், மாவட்டத்தில் தொடர்ந்து அதிகரித்துவரும் கரோனா தொற்றால் கூடுதலாகச் சிகிச்சை மையங்கள் அமைப்பதற்கான நடவடிக்கைகளில் மாவட்ட நிர்வாகம் ஈடுபட்டுவருகிறது. அதன் ஒருபகுதியாக தற்போது பெரியகுளம் அரசு மருத்துவமனையில் உள்ள செவிலியர் பயிற்சிக் கல்லூரி, மாணவியர் விடுதி ஆகியவற்றை கரோனா சிகிச்சை மையமாக மாற்றியமைப்பது தொடர்பாக நடைபெற்றுவரும் பணியினை மாவட்ட ஆட்சியர் பல்லவி பல்தேவ் பார்வையிட்டு ஆய்வு நடத்தினார்.