அதிமுகவில் கடந்த சில நாள்களாக முதலமைச்சர் வேட்பாளர் தொடர்பாக ஓ.பன்னீர் செல்வம் - எடப்பாடி பழனிசாமி இடையே ஏற்பட்ட மோதல் தற்போது சுமுகமடைந்துள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில், அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய அதிமுகவின் முதலமைச்சர் வேட்பாளர் குறித்த அறிவிப்பு இன்று(அக்.07) வெளியாகிறது.
அதிமுக ஒருங்கிணைப்பாளரும், துணை முதலமைச்சருமான ஓ.பன்னீர் செல்வத்தின் கோரிக்கைப்படி அதிமுகவில் 11 பேர் கொண்ட வழிகாட்டுதல்குழு அமைக்கப்பட உள்ளது. மேலும் அதிமுகவின் இணை, துணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் கலைக்கப்பட்டு ஒரே தலைமையின்கீழ் ஒருங்கிணைப்பாளராக ஓ.பன்னீர்செல்வத்தை நியமிக்க வாய்ப்பிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்நிலையில் அதிமுகவின் தலைமைப் பொறுப்பை ஏற்குமாறு ஓ.பன்னீர் செல்வத்திற்கு ஆதரவாக "அம்மா அவர்களால் அடையாளம் காட்டப்பட்ட ஒரே அரசியல் வாரிசு" என ஓ.பன்னீர்செல்வத்தின் புகைப்படமிட்டு "தலைவா வா! தலைமை ஏற்கவா!" என்ற வாசகத்துடன் அச்சிடப்பட்டுள்ள சுவரொட்டியை அக்கட்சியின் மதுரை புறநகர் கிழக்கு மாவட்டத்தைச் சேர்ந்த ராஜ்மோகன் என்பவர் ஒட்டியுள்ளார்.
எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆகியோர் புகைப்படம் மட்டும் இடம் பெற்றிருந்த அந்த சுவரொட்டியில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் படம் இல்லாதது அதிமுகவில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சுவரொட்டிகள் மதுரை, சென்னை, மற்றும் ஓ.பன்னீர்செல்வத்தின் சொந்த ஊரான தேனி மாவட்டம் பெரியகுளத்தில் உள்ள காந்தி சிலை, தேனி சாலை, அக்ரஹாரத் தெருவில் உள்ள அவரது வீடு முன்பாகவும் ஒட்டப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: இன்றைய நிகழ்வுகள் மற்றும் செய்திகளின் தொகுப்பு #ETVBharatNewsToday