தேனி: ஆண்டிபட்டி அருகே உள்ள புள்ளிமான் கோம்பை பகுதியைச் சேர்ந்தவர், தெய்வகனி. இவருக்கு ஒரு மகனும், மகளும் உள்ளனர். இவர் தனது கணவருடன் வருசநாடு பகுதியில் வசித்து வந்தார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு கணவர் உயிரிழந்து விட்டதால், மாமியார் உடன் பிரச்னை ஏற்பட்டு அங்கிருந்து மாமியார் விரட்டியதால், புள்ளிமான் கோம்பை பகுதியில் உள்ள தனது தாயார் வீட்டில் வசித்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில், தாயார் வீட்டில் வசித்து வரும் தன்னை அங்கு இருக்கக் கூடாது என்று பெரியப்பா மொக்கை, அவரது மனைவி, மகன்கள் உள்பட நான்கு பேர் மிரட்டுவதாகக் கூறி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.
இது குறித்து தெய்வகனி கூறுகையில், ‘நான் எனது தாயார் வீட்டில் வசித்து வருகிறேன். ஆனால் எனது உறவினர்கள் இங்கு இருக்க எனக்கு உரிமை இல்லை என்றும், சொத்தில் பங்கு கேட்டு வந்திருக்கிறாயா எனக் கூறி மானபங்கப்படுத்தினர். என்னையும் என் குழந்தைகளையும் கொன்று விடுவதாக மிரட்டல் விடுகின்றனர். அதுமட்டுமின்றி நேற்று எனது தந்தையையும், என்னையும் அடித்து துன்புறுத்தினர்.
இதில் ஏற்பட்ட காயத்தினால், எனது தந்தை கானாவிளக்கு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து ஆண்டிபட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்தும் உரிய நடவடிக்கை எடுக்காததால் எனக்கும், எனது குழந்தைகளின் உயிருக்கும் ஆபத்து இருப்பதாகத் தெரிகிறது. அதனால் சம்பந்தப்பட்ட நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளிக்க வந்துள்ளேன்’ என்றார்.
இதையும் படிங்க: தென்காசியை மிரட்டும் கனமழை.. ரயில்வே சுற்றுச்சுவர் இடிந்து சேதம்!