தேனி: தமிழக, கேரளா எல்லைப் பகுதியான தேனி மாவட்டத்தில் அமைந்துள்ளது முல்லைப் பெரியாறு அணை. தேனி, மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம் உள்ளிட்ட ஐந்து மாவட்ட மக்களின் குடிநீர் தேவைக்காகவும், விவசாய நிலங்களுக்கான பாசன வசதிகளுக்கு நீர் ஆதாரமாகவும் இந்த அணை விளங்கி வருகிறது.
இந்த நிலையில், கடந்த சில மாதங்களாக தேனியில் மழையின்றி வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டது. இதனால் அணைக்கு நீர்வரத்து முற்றிலும் தடைபட்டதால் அணையில் இருந்து திறந்து விடப்படும் நீரின் அளவும் குறைந்தது. இத்தகைய சூழ்நிலையில், கடந்த சில நாட்களாக பெரியாறு அணையின் நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்த கனமழையின் காரணமாக அணைக்கு நீர்வரத்து சற்று அதிகரிக்கத் தொடங்கியது.
கடந்த மாதம் அணையில் நீர் வரத்து இன்றி காணப்பட்ட நிலையில் இன்று அணையின் நீர்வரத்து ஆயிரத்து 227 கன அடியாக உயர்ந்து, தற்போது அணையில் 124.10 அடி நீர் இருப்பு உள்ளது. மேலும் அணையில் இருந்து வெளியேற்றப்படும் நீரின் அளவு ஆயிரத்து 333 கன அடியாக உயர்த்தப்பட்டு உள்ளது.
அணையில் இருந்து வெளியேற்றப்படும் நீரின் அளவு அதிகரிக்கப்பட்ட காரணத்தால் தற்போது வீரபாண்டி பெரியாற்றில் தண்ணீர் வரத்து வழக்கத்தை விடக் கூடுதலாக வரத் தொடங்கி உள்ளது. மேலும் வரும் நாட்களில் தொடர்ந்து மழை பெய்யக்கூடிய வாய்ப்பு இருப்பதால் முல்லைப் பெரியாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம் இருப்பதாகவும், அதன் காரணமாக பொதுமக்கள் யாரும் ஆற்றில் குளிக்கவோ பிற எந்த தேவைக்காகவும் இறங்கவோ கூடாது என நீர்வளத்துறை அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இந்த நிலையில் நீர்வளத்துறையின் வெள்ள அபாய எச்சரிக்கையும் மீறி பொதுமக்கள் தங்களது குடும்பத்தினருடனும், நண்பர்களுடனும் ஆபத்தை உணராமல் ஆற்றில் குளித்தும் மீன்பிடித்தும் வருகின்றனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு நீர்வளத்துறை அலுவலர்களின் எச்சரிக்கையை மீறி பெரியாற்றில் குளிக்கச் சென்ற இளைஞர் ஒருவர் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட நிலையில் அவரது உடலை நான்காவது நாளாகத் தேடி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: "இந்துக்களின் வழிபாட்டிடத்தை கல்குவாரியாக்க விடமாட்டோம்" - பொங்கியெழும் இஸ்லாமியர்கள்