தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே உள்ள அய்யம்பட்டியில் இன்று காலை எட்டு மணி முதல் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்று வருகிறது. 600 காளைகள், 300 மாடுபிடி வீரர்கள் என சுழற்சி முறையில் இதில் இறக்கிவிடப்பட உள்ளன. விறுவிறுப்பாக நடைபெற்று வரும் இப்போட்டியை குழந்தைகள், இளைஞர்கள், பெண்கள், முதியவர்கள் என அனைவரும் குதூகலத்துடன் கண்டு ரசித்து வருகின்றனர்.
இந்நிலையில் மாடுகள் சேகரிக்கும் இடத்தில் பார்வையாளராக நின்றிருந்த சின்னமனூர் சக்திவேல் என்பவரது மகன் முருகேசன் (29) மாடு முட்டியதில் படுகாயமடைந்தார். சிகிச்சைக்காக சின்னமனூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்து சின்னமனூர் காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். ஜல்லிக்கட்டு போட்டியை காண வந்த நபர் மாடு முட்டி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.