தேனி: பெரியகுளம் அருகே மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் 126.28 அடி உயரம் கொண்ட சோத்துப்பாறை அணை உள்ளது. இந்த அணைக்கு மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதி நீர்ப்பிடிப்பு பகுதியாக உள்ளது. சோத்துப்பாறை அணையின் நீர் பிடிப்பு பகுதியில் தென் மேற்கு பருவ மழை போதிய அளவு பெய்யாது போனதால் அணைக்கு நீர் வரத்து இல்லாமல் போனது.
இந்த நிலையில் கடந்த 10 நாட்களாக அணையின் நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக சோத்துப்பாறை அணைக்கு நீர்வரத்து அதிகரிக்கத் தொடங்கியது. இந்த சூழ்நிலையில் கடந்த வாரம் அணையின் நீர்மட்டம் 121 அடியாக இருந்த நிலையில் தொடர்ந்து அணைக்கு நீர்வரத்து சீராக இருந்தது.
இதற்கிடையே நேற்று முன்தினம் (அக். 23) அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த பலத்த மழையின் காரணமாக அணைக்கு நீர்வரத்து மீண்டும் அதிகரித்தது. இதனைத் தொடர்ந்து சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் படிப்படியாக உயரத் தொடங்கிய நிலையில் தனது முழு கொள்ளளவான 126.28 அடியை நேற்று (அக். 24) மாலை 5 மணி அளவில் அணை எட்டியது.
இதன் தொடர்ச்சியாக சிறிது நேரத்தில் சோத்துப்பாறை அணை நிரம்பி பிரதான மதகு வழியாக தண்ணீர் வெளியேறத் தொடங்கியது. மேலும், சோத்துப்பாறை அணையில் நிரம்பி வெளியேறும் தண்ணீர் அப்படியே வராக நதியில் கரைபுரண்டு ஓடுகிறது. இதன் காரணமாக பெரியகுளம், வடுகபட்டி, மேலங்களம், ஜெயமங்களம், குள்ளப்புரம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள வராக நதி ஆற்றங்கரையோர மக்களுக்கு பொதுப் பணித்துறையினர் மூன்றாம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்து உள்ளனர்.
அணையில் மொத்த நீர் இருப்பு 100 மில்லியன் கன அடியாக உள்ளது. மேலும் தொடர்ந்து மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாலும், அணையில் இருந்து வெளியேற்றப்படும் உபரி நீரின் அளவு அதிகரிக்கும் நிலை உள்ளதாலும் ஆற்றங்கரையோர பகுதி மக்கள் ஆற்று பகுதிக்குச் செல்லவோ அங்கு குளிக்கவோ வேண்டாம் என்றும் பொதுப்பணித்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும், சோத்துப்பாறை அணை நிரம்பி நீர்வரத்து அதிகரித்துள்ளதால் சுற்றுவட்டார விவசாயிகள் அனைவரும் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர் இதுகுறித்து பொதுப்பணித்துறை அதிகாரிகள் கூறுகையில், "சோத்துப்பாறை அணை நிரம்பி தண்ணீர் வெளியேறி வருகிறது. வரும் நாட்களில் மழை பெய்தால் ஆற்றில் வெள்ளம் ஏற்படும் அபாயம் உள்ளது. இந்த காரணத்தால் வராக நதி கரையோரம் உள்ள பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தப்பட்டு உள்ளனர்" என்று தெரிவித்தனர்.
இதையும் படிங்க: தருமபுரியில் விவசாய கிணற்றில் காலாவதியான ஆயிலை கலந்த மர்ம நபர்கள்.. கண்ணீர் வடிக்கும் விவசாயிகள்!