தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே அரசு நெல் கொள்முதல் நிலைய கட்டுமானத்திற்காகத் தோண்டப்பட்ட குழியில் தவறி விழுந்து ஆறு வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பெரியகுளம் தாலுகா காட்ரோடு அடுத்துள்ள நூல் தோப்பு என்னும் பகுதியில் தமிழ்நாடு அரசு வேளாண் துறை சார்பாக நெல் கொள்முதல் நிலையம் கட்டும் பணிகள் நடைபெற்றுவருகின்றன.
இந்நிலையில் கட்டடப் பணிகளுக்காகத் தோண்டப்பட்ட குழியில் அப்பகுதியைச் சேர்ந்த செந்தில், ஜோதி தம்பதியினரின் மகனான ஹரீஸ் என்னும் ஆறு வயது சிறுவன் தவறி விழுந்திருக்கிறார்.
அந்தக் குழியில் முழுவதும் நீர் நிரம்பி இருந்ததால் சிறுவன் தப்பிக்க முடியாமல் மூழ்கி உயிரிழந்தார். தகவலறிந்த உறவினர்கள் அக்குழிக்குள் இருந்து சிறுவனின் உடலை மீட்டனர்.
தொடர்ந்து ஒப்பந்ததாரர் மீது உரிய நடவடிக்கை எடுக்கக் கோரி திண்டுக்கல் - குமுளி தேசிய நெடுஞ்சாலையில் உயிரிழந்த சிறுவனின் உடலுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர். தற்போது சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் காவல் துறையினர் பேச்சுவார்த்தை நடத்திவருகின்றனர்.