தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகேயுள்ள வைகை அணையிலிருந்து 58ஆம் கால்வாயில் நேற்று முன்தினம் அதிகாலை தண்ணீர் திறக்கப்பட்டது. மதுரை மாவட்டம் உசிலம்பட்டி தாலுகா, திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை தாலுகா ஆகிய பகுதிகளில் உள்ள 58 கிராமங்கள் பயனடையும் வகையில் 1993ஆம் ஆண்டு 58ஆம் கால்வாய் திட்டம் தொடங்கப்பட்டது. பல்வேறு தாமதத்திற்கு பிறகு பணிகள் முடிந்து கடந்தாண்டு முடிவுற்று இதற்கான சோதனை ஓட்டமும் நடந்தது.
தற்போது வைகை அணையின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்ததையடுத்து 58ஆம் கால்வாயில் தண்ணீர் திறக்க வேண்டும், அணையில் இருந்து நிரந்தரமாக தண்ணீர் திறப்பதற்கான அரசாணை வெளியிட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி உசிலம்பட்டியில் கடந்த சில தினங்களுக்கு முன்பு விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனையடுத்து நேற்று (டிசம்பர் 5) முன்தினம் அதிகாலை வைகை அணையிலிருந்து 58ஆம் கால்வாயில் விநாடிக்கு 100கன அடி வீதம் தண்ணீர் திறக்கபட்டது. நீண்ட கால போராட்டத்திற்கு பிறகு திறக்கப்பட்ட தண்ணீரால் மகிழ்ச்சியடைந்த உசிலம்பட்டி பகுதி கிராம மக்களின் மகிழ்ச்சி சிறிது நேரம்கூட நீடிக்கவில்லை.
நேற்று ஆண்டிபட்டி அருகேயுள்ள டி.புதூர் என்னுமிடத்தில் கால்வாயின் கரை உடைந்து தண்ணீர் அனைத்தும் விளைநிலங்கள், குவாரிகளுக்குள் புகுந்தது. இதனால், அணையில் திறக்கப்பட்ட தண்ணீர் நிறுத்தப்பட்டு கரையை சரி செய்யும் பணியில் பொதுப்பணித்துறையினர் ஈடுபட்டனர்.
மேலும், உடைப்பு ஏற்பட்ட இடங்களை உடனடியாக சரி செய்ய கோரிக்கை விடுத்து விவசாயிகள் தண்ணீர் புகுந்த விளைநிலங்களுக்குள் இறங்கி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில் டி.புதூர் பகுதியில் உடைப்பு ஏற்பட்ட இடங்களை வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் ஆர். பி. உதயகுமார் இன்று பார்வையிட்டார்.
உசிலம்பட்டி எம்.எல்.ஏ நீதிபதி, மதுரை மாவட்ட ஆட்சியர் வினய், தேனி மாவட்ட ஆட்சியர் பல்லவி பல்தேவ் மற்றும் பொதுப்பணி, வருவாய் உள்ளிட்ட துறை சார்ந்த அலுவலர்களுடன் சம்பவ இடத்தில் பார்வையிட்ட அமைச்சர் பராமரிப்பு பணிகள் குறித்த விவரங்களை கேட்டறிந்தார்.
இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஆர்.பி. உதயகுமார், "உசிலம்பட்டி பகுதி கிராம மக்களின் தேவைக்காக 58ஆம் கால்வாயில் தண்ணீர் திறக்கப்பட்டது. இப்பகுதியில் எலி, காட்டுப்பன்றிகள் துளையிட்டதாலேயே கரைகளில் உடைப்பு ஏற்பட்டது.
இப்பகுதியில் உள்ள ஆறு கி.மீ தூரத்திற்கு மேல்புறம் உயரமாகவும், கீழ்புறம் தாழ்வாகவும் இருப்பதால், நீர் அழுத்தம் அதிகம் ஏற்படுகிறது. இவற்றை சரி செய்து வருங்காலத்தில் இது போன்று ஏற்படாமல் இருப்பதற்கு நிரந்தர தீர்வு காணப்படும்" என்று அவர் தெரிவித்தார்.
58ஆம் கால்வாய் கரைப்பகுதிகளை சிமெண்ட் தளம் அமைக்க வேண்டும் என்று உசிலம்பட்டி பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்து வரும் நிலையில், எலி, காட்டுப்பன்றிகள் துளையிட்டதாலேயே கரை உடைந்தது என்ற அமைச்சரின் பேச்சு விவசாயிகள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: மீண்டும் நீதிமன்றத்தை நாடுவதைத் தவிர வேறு வழி இல்லை - ஸ்டாலின் அறிக்கை