தேனி மாவட்டம் ஆண்டிபட்டியில் உள்ள பாலாஜி நகரில் குடும்பத்துடன் வசித்துவருபவர் மாரிக்கனி. இவர் ஆண்டிபட்டி காவல் நிலையம் எதிரில் ஐஸ்கிரீம் கடை நடத்திவருகிறார். வழக்கம்போல் நேற்று காலை தனது கடையை நடத்துவதற்காக மாரிக்கனி சென்றுள்ளார். பின்னர் அவருக்கு உணவு கொடுப்பதற்கு அவரது மனைவி நாகதேவி வீட்டை பூட்டிவிட்டுச் சென்றுள்ளார்.
இதையடுத்து, கடையிலிருந்து மதியம் வீட்டிற்குத் திரும்பிய நாகதேவி அங்கு வீட்டின் பூட்டு உடைக்கப்பட்ட இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின்னர் இது குறித்து காவல் துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது.
தகவலின்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்துவந்த காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டனர். இதில் வீட்டின் பீரோவிலிருந்த 50 சவரன் நகை கொள்ளையடிக்கப்பட்டது தெரியவந்தது. உடனடியாக தேனியிலிருந்து கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு சம்பவ இடத்தில் கிடைத்த தடயங்களைச் சேகரித்தனர்.
மேலும் சம்பவ இடத்திற்கு வந்த மோப்பநாய் அங்கிருந்து சென்று அரசுப் பெண்கள் மேல்நிலைப்பள்ளி வரை ஓடி நின்றது. இது குறித்து வழக்குப்பதிவு செய்த ஆண்டிபட்டி காவல் துறையினர் விசாரணையை துரிதப்படுத்தி திருட்டுச் சம்பவத்தில் ஈடுபட்டவர்களை தீவிரமாகத் தேடிவருகின்றனர்.
பகலில் நிகழ்ந்த இத்திருட்டுச் சம்பவம் ஆண்டிபட்டி பகுதியில் உள்ள பொதுமக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.